தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்காததால் அவதி

திருப்புவனம்: திருப்புவனத்தில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலை சரி செய்யப்படாததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

திருப்புவனத்தில் 16 கோடி ரூபாய் செலவில் 18 வார்டுகளிலும் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடக்கிறது.குழாய் பதிப்பதற்காக சிமென்ட், தார், மண், பேவர் பிளாக் சாலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டன.ஆனால் மீண்டும் சாலையை சரி செய்யாமல் அப்படியே விட்டு விட்டதால் நகரின் இடங்களில் நடந்து கூட செல்ல முடியவில்லை.

திருப்புவனம் புதுார் கொண்டயதாசர் மடத் தெருவில் நன்றாக இருந்த பேவர் பிளாக் சாலை பெயர்த்து எடுக்கப்பட்டு குழாய் பதிக்கப்பட்டது. மீண்டும் சாலையை சரி செய்யாமல் இருப்பதால் நடந்து கூட செல்ல முடியவில்லை.

200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள தெருவில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் டூவீலரை கூட உருட்டிக் கொண்டே செல்ல வேண்டியுள்ளது . அவசரத்திற்கு ஆட்டோக்கள் வர மறுக்கின்றன.

பல முறை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் மீண்டும்பேவர் பிளாக் சாலையை அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement