விடுமுறை நாளில் கிராம சபை கூட்டம் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் அதிருப்தி

அன்னுார்: ஞாயிறன்று கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஆண்டுக்கு ஆறு முறை, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் மற்றும் சிறப்பு கிராம சபை கூட்டங்களும் நடத்தப்படுகிறது. இந்த கூட்டங்களில் ஊராட்சிகளின் வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. பொதுமக்களின் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்படுகிறது. பின்னர் ஒன்றிய, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்று மக்களின் கோரிக்கைகளை கேட்கின்றனர். இந்நிலையில், உள்ளாட்சிகள் தினமான நவ. 1ம் தேதி வரும் ஞாயிறன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கும் என, ஊரக வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கூறுகையில், ‘சாதாரண நாட்களில் மீட்டிங், களப்பணி என இரவு வரை பணிபுரிந்து வருகிறோம். தற்போது கிராம சபை கூட்டத்தை ஞாயிறன்று நடத்துவதால், வார விடுமுறை நாளில் கூட குடும்பத்துடன் இருக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் மற்றும் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம். விடுமுறை நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும்’ என்றனர்.

Advertisement