எருமப்பட்டியில் தொடர் கைவரிசை 4 வாலிபர்களிடம் போலீஸ் விசாரணை

எருமப்பட்டி: எருமப்பட்டி பகுதியில் தொடர் கைவரிசை காட்டிய, நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி, வடவத்துாரில் மருதகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்றனர். அதேபோல், பொட்டிரெட்டிப்பட்டி, தேவராயபுரம் டாஸ்மாக் கடையை உடைத்து, கள்ளாவில் வைத்திருந்த பணம், கோடாங்கிப்பட்டியில் ஆடுகளையும் திருடி சென்றனர். கடந்த, 13, 14, 15, 16 என, தொடர்ந்து, நான்கு நாட்கள் திருட்டு சம்பவம் அரங்கேறியது. இதுகுறித்து, எருமப்பட்டி போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், எருமப்பட்டி - பொன்னேரி சாலையில், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படி சுற்றிய, நான்கு வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், எருமப்பட்டியை சேர்ந்த, 16, 17, 18 வயதுடைய வாலிபர்கள் என்பதும், நாமகிரிப்பேட்டை அடுத்த தண்ணீர்பந்தல்காடு பகுதியில் தங்கி, கோவில் உண்டியல், டாஸ்மாக்கில் கைவரிசை காட்டியதும், ஆடுகளை திருடியதும் தெரியவந்தது. இதில், 17 வயது வாலிபர் ஒருவர், 2025ல், திருட்டு வழக்கில் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த, மே மாதம் தப்பி வந்தது தெரியவந்தது. நால்வரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement