பல லட்சம் ரூபாய் கனிமங்கள் திருட்டு தடுத்து நிறுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கனிமங்கள் வெட்டி திருடப்படுவதை தடுக்க, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிலுள்ள பல கிராமங்களில் சுவாமி சிலைகள் செய்ய பயன்படும் அரிய வகை கற்கள் பூமிக்கடியில் புதைந்து கிடக்கின்றன. இதையறிந்து சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுவாமி சிலை செய்ய, கற்களை கொடுக்கும் புரோக்கர்கள், 50க்கும் மேற்பட்டோர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தாலுகாவில் குவிந்துள்ளனர். இவர்கள் இக்கற்களை வெட்டி எடுக்க, முறைப்படி அரசிடம் அனுமதி பெறாமல், நில உரிமைதாரர்களிடம், ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி விட்டு, வருவாய், கனிம வளம், போலீஸ் அனைத்தும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என கூறுகின்றனர். மேலும் உள்ளூர் புரோக்கர்கள் மூலம் அலுவலர்களை கவனித்து, நிலம் சமன் செய்யப்படுவதாக உத்தரவு பெற்று விடுகின்றனர்.

இதை வைத்து, கனரக ஹிட்டாச்சி இயந்திரங்கள் மூலம், நிலத்தை ஆழமாக பறித்து, 6 அடி முதல், 10 அடி வரையிலான கறுப்பு கற்களை வெட்டி எடுக்கின்றனர். இவை தரம் பிரித்து, லாரிகளில், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு இரவில் கடத்தப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அலுவலர்களிடம் கேள்வி கேட்கும்போது, பெயரளவிற்கு சிறிய வாகனங்கள் மீது வழக்கு பதிகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், மெணசி இறையரசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், அரசு அனுமதியின்றி இரவு பகலாக விலையுயர்ந்த கற்கள் பெரிய ஹிட்டாச்சி வாகனம் மூலம், வெட்டி எடுக்கப்பட்டது. இதை அப்பகுதி மக்கள் சிலர், மாவட்ட கனிமவளத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் சென்ற கனிம வள அலுவலர்கள், பெயரளவிற்கு கற்கள் வெட்ட பயன்படுத்திய சிறிய டிராக்டரை பிடித்து, பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

இதேபோன்று வெ.புதுார், குருபரஹள்ளி, சிந்தல்பாடி, வகுத்தப்பட்டி, ராமியம்பட்டி ஏ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, பையர்நத்தம், பொம்மிடி, மெணசி, பூதநத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது என, பொதுமக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து தர்மபுரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை உதவி இயக்குனர் அஸ்வினி கூறுகையில், ''பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் பல பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டுத்தான் வருகிறோம். சில இடங்களில் அபராதம் விதித்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும், மேல்நடவடிக்கை எடுத்தும் வருகிறோம்,'' என்றார்.

Advertisement