அரசுப்பள்ளிகளில் இனி ஏஐ., வகுப்பறை எளிதாக கற்றுத்தர ஆசிரியர்களுக்கு பயிற்சி

–நமது நிருபர்–: ஏஐ., தொழில்நுட்ப உதவியோடு, கடின பாடங்களை மாணவர்களுக்கு புரியும் வகையில், அனிமேஷன் வீடியோ, படங்கள், எளிய விளையாட்டு புதிர் வடிவில் சொல்லித்தர, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் ஒருங்கிணைந்த கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மூலம், கடந்த 4 ஆண்டுகளாக பாடங்களை எளிமையாக விளக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், மாநில குழு ஒவ்வொரு பாடத்திற்கும் பிரத்யேக வீடியோ தயாரித்து அனுப்பும். இதை ஆசிரியர்கள் எடுத்துரைப்பர்.

ஆனால் தற்போது ஏஐ., தொழில்நுட்பம் மூலம், சில ஏஐ., கருவிகளை பயன்படுத்தி, ஆசிரியர்களே அனிமேஷன் வீடியோ, பாடல், ஆடியோ, படங்கள் உருவாக்குதல், எளிய விளையாட்டு புதிர் போன்றவற்றை உருவாக்கி, மாணவர்களுக்கு சொல்லித்தர பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்கு எந்தெந்த ஏஐ., கருவிகளை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து, முதுகலை ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் பயிற்சி அளிக்கிறது. முதற்கட்டமாக இயற்பியல், வேதியியல், கணித பாட முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும், பாட ரீதியான ஏஐ., பயிற்சி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆசிரியருக்கும் வெவ்வேறு மாதிரியான கற்பித்தல் திறன் இருக்கும். இதில் ஏஐ., புகுத்தினால், இன்னும் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக வேதியியல் பாடத்தில், திறன், விசை, துாரம் போன்றவற்றை, வீடியோ வடிவில் கற்பித்தால், பாடக்கருத்துகள் மறக்காது. கணிதத்திலும் இதேபோன்ற அனிமேஷன் முறையை கையாள முடியும். இதற்காக, கூகுள்வீடியோ, நோட்புக் எல்.எம்., கிளாடு, சாட் ஜிபிடி., போன்ற முக்கிய ஏஐ., கருவிகளை ஆசிரியர்களுக்கு சொல்லி தருகிறோம். பயிற்சியின் இறுதியில், ஆசிரியர்களும் இதை பயன்படுத்தி, ஏஐ., வீடியோ உருவாக்குவர். இம்மாத இறுதிக்குள், அந்தந்த மாவட்ட அளவில் இப்பயிற்சி முடிக்கப்படும். அடுத்த மாதத்தில் இருந்து, மாணவர்களுக்கு இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வகுப்பு எடுக்க வேண்டும். தொடர்ந்து மற்ற பாட ஆசிரியர்களுக்கும், ஏஐ., பயிற்சி அளிக்கப்படும்’ என்றனர்.

Advertisement