அறிவிக்கப்படாத 'திடீர்' மின்வெட்டால் பொதுமக்கள் அவதி: அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வலியுறுத்தல

-நமது நிருபர்-


விழுப்புரம் மின்பகிர்மான கோட்டத்தில் தொடரும் திடீர் மின்வெட்டால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையை அதிகாரிகள் சரிசெய்யாவிட்டால் வீதிக்கு வந்து போராட மக்கள் முடிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மின்வெட்டு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்த கால கட்டத்தில் பொதுமக்கள் வெப்ப சலனத்தால் அதிகமாக ஏ.சி., உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்துவதன் காரணமாக மின்தேவை அதிகம் ஏற்பட்டு மின்வெட்டு ஏற்படுவதாக, மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுவது, வழக்கமான ஒன்று.

இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை சூழலிலும், விழுப்புரம் மின்பகிர்மான கோட்டத்தில் இரவு மற்றும் பகல் நேரங்கில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து வருகிறது.

விழுப்புரத்தில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாகவும், சில நேரங்களில் சூறை காற்றோடு பலத்த மழையும் பெய்தது.

இதனால், விழுப்புரம் நகரம் மட்டுமின்றி சுற்றியுள்ள திருவெண்ணெய்நல்லுார், காணை, நன்னாடு, கோலியனுார், வளவனுார், பிடாகம் உள்பட பல்வேறு கிராமப்புறங்களில் மின்வெட்டு 3 முதல் 5 மணி நேரம் தொடர்ந்தது. இதனால், பொதுமக்கள் இரவில் வெளியே கூட செல்ல முடியாத நிலையில் சிரமப்பட்டனர்.

மழை பெய்யும் தருணம் மட்டுமின்றி, பகல் நேரத்திலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையிலும் திடீர், திடீரென தொடர்கிறது.

இது மட்டுமின்றி, வாரம் ஒரு முறை மின்சார பராமரிப்பு பெயரில், 6 முதல் 7 மணி நேரம் மின்சாரத்தை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

இது சம்பந்தமாக மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:

மழையின் போது மின்னல் தாக்குதல், மரம் விழுவதால் உயர் மின்னழுத்த லைன்களில் உள்ள இன்சுலேட்டர்கள் வெடித்து மின்தடை ஏற்படுகிறது.

இதை கண்டுபிடித்து சரிசெய்ய நீண்ட நேரம் ஆகிறது. இரவு நேரங்களில் இது போன்ற நிலை ஏற்பட்டால், மழை பெய்தால் அதை சரிசெய்ய நீண்ட நேரம் ஆகிறது. கூடிய விரைவில் சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் வெயில் காலம் மட்டுமின்றி தற்போது மழை காலத்திலும், மின்வெட்டு தொடர்ந்தால் வீதிக்கு வந்து போராட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement