சிறுநீர் கழிக்க வேண்டாம் விழிப்புணர்வு பேனரில் கோவில் கோபுர படம்: சர்ச்சையில் மாநகராட்சி

1

கரூர்: சிறுநீர் கழிக்க வேண்டாம் என்ற விழிப்புணர்வு பேனரில், கோவில் படம் அச்சடிக்கப்பட்டுள்ளதால், கரூர் மாநகராட்சி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, 48 வார்டுகளிலும் நாள்தோறும், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கப்படுகிறது. இருப்பினும், பல இடங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள சாலை ஓரம், பொது இடங்களில் குப்பை கொட்டி செல்கின்றனர். இதை தடுக்கும் நோக்கில், மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எச்சரிக்கை பலகை வைப்பது, விழிப்புணர்வு வாசகம் எழுதுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, திரு.வி.க., சாலையோரத்தில் குப்பை கொட்டப்பட்டு வந்த இடத்தில், மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பிளக்ஸ் பேனர் ஒட்டப்பட்டிருந்தது. அதில், ’பொது இடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டாம், எச்சில் துப்ப வேண்டாம், குப்பை போட வேண்டாம்’ என்பன போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், அந்த விழிப்புணர்வு வாசகங்களுக்கு பின்புலமாக, ஹிந்து கோவில் கோபுரத்தின் படம் அச்சடிக்கப்பட்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கணேசன், தனது சமூக வலைதளத்தில், ‘பொது இடங்களில் அசுத்தம் செய்வதை தடுக்கும் விழிப்புணர்வு பேனரில், பக்தியுடன் வணங்கப்படும் புனிதமான ஹிந்து கோவில் கோபுரத்தின் படத்தை அச்சிட்டிருப்பது, மத உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்த, கரூர் மாநகராட்சிக்கு ஹிந்து கோவில்களின் படம் மட்டும்தான் கிடைத்ததா? சர்ச்சைக்குரிய பேனரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும். அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும்’ என, தெரித்துள்ளார்.

Advertisement