பிரான்சில் இருந்து புதுச்சேரி ரவுடிகளுக்கு பணம் தாதா மணிகண்டன் கடிதம் மூலம் அதிர்ச்சி தகவல்

புதுச்சேரி: கிருமாம்பாக்கத்தில் இடத்தை கைப்பற்றுவது தொடர்பாக ரவுடிகள் மூலம் கட்டப்பஞ்சாயத்து நடத்தப்படுவதாகவும், இதன் பின்னணியில் கொலைகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் சிறையில் உள்ள பிரபல ரவுடி தாதா மணிகண்டன் போலீஸ் தலைமையகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கடிதத்தில், பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு பிரபல ரவுடி ஒருவர் புதுச்சேரி இளைஞர்களுக்கு பணத்தாசை காட்டி கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும், தற்போது நடந்த கொலை சம்பவத்திற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி வழக்கில் சேர்க்க முயற்சி நடக்கிறது.

மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகர் மற்றும் தொழிலதிபர் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாகவும், குறிப்பிட்ட இடம் தொடர்பான பிரச்னையில் ரவுடிகளுக்கு எவ்வளவு பணம் செல்கிறது என்பது குறித்து தகவல்கள் தன்னிடம் உள்ளது. இந்தக் கடிதத்தின் அடிப்படையில், கிருமாம்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, ரவுடி தாதா மணிகண்டன் அனுப்பியதாக கூறப்படும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை குறித்து போலீசார் விசாரணையை துவங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement