கல்லுாரி பேராசிரியரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

இடைப்பாடி: இடைப்பாடியில், பேராசிரியரை தாக்கிய வழக்கில், மேலும் ஒருவர் கைது
செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், கோனமோரிவளவு பகுதியில், இடைப்பாடி அரசு கல்லுாரி உள்ளது. தினமும் மாலை கல்லுாரி முடிந்து மாணவ, மாணவியரை, பேராசிரியர்கள் பஸ்சில் ஏற்றி அனுப்புவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் மாலை கல்லுாரி முடிந்து, வணிகவியல் பேராசிரியர் அனபழகன், 46, மாணவ, மாணவியரை பஸ்சில் ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது குடி போதையில் வந்த இருவர், மாணவியரை ஈவ்-டீசிங் செய்ததோடு, தகராறும் செய்துள்ளனர். அதை தட்டி கேட்ட பேராசிரியர் அன்பழகனை தாக்கியுள்ளனர். உடனிருந்த பேராசியர்கள், மாணவர்கள் சேர்ந்து போதையில் இருந்த இருவரையும் பிடித்தனர். அதில் ஒருவர் தப்பியோடினார். சிக்கியவரை போலீசில் ஒப்படைத்தனர்.
கொங்கணாபுரம் போலீசார் விசாரித்து, இடைப்பாடி, ஏரிரோட்டை சேர்ந்த ஆதித்யா, 20, என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய வெள்ளாண்டிவலசு காமராஜ் நகரை சேர்ந்த விக்ரம், 20, என்பவரை நேற்று கைது செய்தனர்.
ஸ்டேஷனில் வைத்து போலீசார் விசாரித்தபோது, இருவரும் போதையில் சிக்கன் பிரியாணி, கஞ்சா வேண்டும் எனக்கூறி தலையால் சுவற்றில் முட்ட முயற்சித்தனர். மேலும், தப்பியோடவும் முயற்சித்தனர். கொங்கணாபுரம் போலீசார், விடியும் வரை காத்திருந்து, நேற்று காலை இருவரையும் இடைப்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement