குடிநீர் குழாயில் கசிவு சீரமைப்பு பணி தீவிரம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே, தாமரைக்குளம் சர்வீஸ் ரோட்டில் குழாயில் ஏற்பட்ட நீர்க்கசிவு சீரமைக்க, பணிகள் நடந்தது.

குறிச்சி – குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய், பொள்ளாச்சி -– கோவை தேசிய நெடுஞ்சாலையில் பதிக்கப்பட்டுள்ளது. கிணத்துக்கடவு, தாமரைக்குளம் பஸ் ஸ்டாப் அருகே (கோவை வழி) சர்வீஸ் ரோட்டில் குழாயில் கசிவு ஏற்பட்டு, கடந்த, 6 மாதங்களாக குடிநீர் ரோட்டில் வழிந்தோடுகிறது.

இது குறித்து, குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் கவனிக்காமல் இருந்தனர். இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சர்வீஸ் ரோட்டில் தண்ணீர் வழிந்தோடியது.

இந்த சம்பவம் குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, குழாய் சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து, பொக்லைன் இயந்திரம் வாயிலாக சீரமைப்பு பணிகள் நடந்தது.

மக்கள் கூறுகையில், ‘பல மாதங்களாக நீர்க்கசிவு குறித்து தகவல் தெரிவித்தும், சரி செய்யாத அதிகாரிகள், இப்போது பிரச்னை பெரிதான பின், சீரமைப்பு பணி மேற்கொண்டு உள்ளனர். வரும் நாட்களில் இதுபோன்று நீர்க்கசிவு ஏற்பட்டால், உடனடியாக சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்,’ என்றனர்.

Advertisement