125 நாள் வேலை ஊதியத்தை தரக்கோரி கிராம மக்கள் மறியல்
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே 125 நாள் வேலை ஊதியத்தை தரக்கோரி அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெண்ணைவலம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி நடந்தது.
அதற்கான ஊதியத்தை வங்கி கணக்கில் இதுவரை வரவு வைக்கவில்லை. இதுகுறித்து பலமுறை பி.டி.ஓ., அலுவலகத்தில் முறையிட்டும் அதிகாரிகள் முறையாக பதில் அளிக்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 9:45 மணியளவில் கடலுார் – சித்துார் பிரதான சாலை பெண்ணைவலம் பஸ் நிறுத்தம் பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் பி.டி.ஓ.,க்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் ஊதியம் வழங்குவதாக உறுதியளித்தனர். இதையெடுத்து 10:45 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.