போக்குவரத்து போலீசாருக்கு கண் பாதிப்பு அதிகரிப்பு: டாக்டர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக, சாலையில் நீண்ட நேரம் நின்று பணியாற்றும் போக்குவரத்துப் போலீசாருக்கு கண் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் உதயசங்கர் வழிகாட்டுதலின்படி, கண் மருத்துவத்துறை டாக்டர் பிரியதர்ஷினி தலைமையில் டாக்டர்கள் விஜயபிரியா, அமுதா அடங்கிய குழுவினர் போக்குவரத்து போலீசாரிடம் ஆய்வு நடத்தினர்.

அந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்ட போக்குவரத்துப் போலீசாரில் சுமார் 78 சதவீதத்தினருக்கு உலர் கண் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. இது பொதுமக்களிடையே உள்ளதைக் காட்டிலும் மிக அதிகமாகும்.

50 சதவீத போலீசாரின் கண்ணின் வெண்படத்தில் ஆரம்பகட்ட செல்கார மாற்றங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. உலர் கண் பிரச்னை மட்டுமல்லாமல், கண் மேல் சதை வளர்ச்சி, பிங்குகுலா கண் நோய் மற்றும் அலர்ஜி காரணமான கண் அழற்சி உள்ளிட்ட பல்வேறு கண் வெளிப்புற நோய்களும் போலீசாரிடம் கண்டறியப்பட்டன.

இப்பிரச்னைகளைக் கண்டறிய ஷிர்மர் சோதனை, கண்ணீர் படலச் சிதைவு நேரம், ஓ.எஸ்.டி.ஐ., வினாத்தொகுப்பு, கண்ணீர்ப்படல உயரம், மெய்போமியன் சுரப்பி செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு அளவீடுகள் பரிசோதனை செய்யப்பட்டன.

போலீசாரின் பணி தொடர்பான மன அழுத்தம், துாக்க நேரம் மற்றும் தினசரி தண்ணீர் அருந்தும் அளவு ஆகியவையும் மதிப்பிடப்பட்டன. இதற்கிடையே, சாலைகளில் நீண்ட நேரம் நிற்பது, வாகனப் புகை, துாசி மற்றும் போாக்குவரத்து விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காத சூழல் போன்றவைகளால் போக்குவரத்து போலீசாருக்கு பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் அதிகரிப்பதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து, போலீசாருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு மற்றும் பிற தீவிர கண் நோய்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

போக்குவரத்துப் போலீசாரின் பணிக்காலத்தைக் குறைப்பது, கண்ணாடிகளைப் பயன்படுத்துவது, அவர்களுக்கு நிழல் கூரை மற்றும் போதுமான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி அவர்களின் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம் என, ஆய்வின் முடிவில் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement