பிறந்த 3வது பெண் குழந்தை சாவு சடலம் தோண்டி எடுத்து விசாரணை
சூளகிரி: சூளகிரி அருகே தம்பதிக்கு பிறந்த மூன்றாவது பெண் குழந்தை உயிரிழந்ததால், குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து, போலீசார் விசாரித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே மாதரசனப்பள்ளியை சேர்ந்தவர் சதீஷ், 38, விவசாயி. இவர் மனைவி பவித்ரா, 30. இவர்களுக்கு, 8 மற்றும் 5 வயதில், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கர்ப்பமான பவித்ராவிற்கு கடந்த, 12ம் தேதி, ஓசூர் தனியார் மருத்துவமனையில் குறைபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வந்த நிலையில், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு, மேல்சிகிச்சைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு கடந்த, 15ம் தேதி டிஸ்ஜார்ஜ் செய்து, வீட்டிற்கு சென்றனர். அன்றிரவு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாக கூறி, போலீசாருக்கு கூட தகவல் தெரிவிக்காமல், வீட்டின் அருகே வாழை மரங்களுக்கு நடுவே, குழந்தையின் சடலத்தை அடக்கம் செய்தனர். மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்து உயிரிழந்ததால், சாவின் சந்தேகம் இருப்பதாக கூறி, உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மோகன், சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்படி, சூளகிரி தாசில்தார் பாலாஜி முன்னிலையில், நேற்று காலை குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.