மழை தாமதத்தால் வரத்து சரிவு சி.வெங்காயம் ரூ.150 ஆக உயர்வு
பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, அயோத்தியாப்பட்டணம், வீரபாண்டி, வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. பருவ மழை ஒரு மாதம் தள்ளி பெய்ததால், சின்னவெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தட்டுப்பாடால் விலை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பனமரத்துப்பட்டியை சேர்ந்த உழவர் சந்தை விவசாயி தங்கவேல் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் ஜூலை, ஆகஸ்டில் பெய்ய வேண்டிய மழை, தாமதமாக செப்டம்பர், அக்டோபரில் வந்துள்ளது. இதில் சின்ன வெங்காயம் சாகுபடி தள்ளிப்போக, தற்போது நாற்று பருவத்தில் உள்ளது. சரியான நேரத்தில் மழை பெய்திருந்தால், தற்போது சின்னவெங்காயம் அறுவடைக்கு வந்திருக்கும்.தாதகாப்பட்டி உழவர் சந்தைக்கு தினமும், 2,000 கிலோ சின்னவெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தற்போது உற்பத்தி குறைந்ததால், 500 கிலோ மட்டும் வருகிறது. அங்கு கடந்த வாரம் ஒரு கிலோ, 50க்கு விற்ற சின்னவெங்காயம், கடந்த, 24 முதல் ஒரு கிலோ, 85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து சின்ன வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. அதை வெளி மார்க்கெட்டில், ஒரு கிலோ, 130 முதல், 150 ரூபாய் வரை விற்கின்றனர். சேலம் மாவட்டத்தில், நாற்று பருவத்தில் உள்ள சின்ன வெங்காயம், டிசம்பரில் அறுவடைக்கு வரும். அதற்கு பின், விலை குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.