பாகிஸ்தானில் ஹிந்துக்கள் எண்ணிக்கை 14.60ல் இருந்து 2 சதவீதமாக குறைந்தது
இஸ்லாமாபாத்:பிரிட்டனைச் சேர்ந்த, 'இன்சைட் யு.கே.,' என்ற ஹிந்துக்களுக்கு ஆதரவான அமைப்பு, பிரிட்டிஷ் ஹிந்துக்களுக்கான அனைத்துக்கட்சி பார்லிமென்ட் குழுவிடம் நேற்று , அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.அந்த அறிக்கையில், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் எவ்வாறு திட்டமிட்டு துன்புறுத்தப்படுகிறார்கள், அவர்களது சொத்துக்கள் எவ்வாறு பறிக்கப்படுகிறது மற்றும் அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
* கடந்த 1941ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அப்போது இந்தியாவுடன் இணைந்திருந்த தற்போதைய பாகிஸ்தான் நிலப்பரப்பில் ஹிந்துக்கள் எண்ணிக்கை, 14.60 சதவீதமாக இருந்தது
* இது பிரிவினைக்குப் பின் தற்போது வரையிலான காலகட்டத்தில் பெருமளவு சரிவு கண்டுள்ளது. தற்போது பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் ஹிந்துக்களின் எண்ணிக்கை, 2 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது
* நாட்டை விட்டு வெளியேறிய அல்லது கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான ஹிந்து குடும்பங்கள், 'எதிரி சொத்து சட்டங்களின்' கீழ் தங்கள் பூர்வீக நிலங்களையும் பண்ணைகளையும் இழந்துள்ளன. காலப்போக்கில், இந்நடவடிக்கை ஒட்டு மொத்த சமூகத்தையும் வறுமையில் தள்ளியதுடன், அவர்களை நிரந்தரமாக இடம் பெயரவும் செய்தது
* நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிந்து, கிறிஸ்தவ பெண்கள், சிறுமிகள் கடத்தப்படுகின்றனர். அவர்கள் மதம் மாற்றப்பட்டு, கடத்தியவர்களுக்கே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.