ஆட்டோ கட்டணத்தை அமல்படுத்த அரசு செயலி உருவாக்க வேண்டும்: தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
அமைந்தகரை: ‘புதிதாக உயர்த்தப்பட்ட ஆட்டோ கட்டண உயர்வை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ‘ஓலா, ஊபர்’ நிறுவனங்களுக்கு இணையாக அரசு சார்பில் ஆட்டோ செயலியை உருவாக்க வேண்டும்’ என, அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரையில், அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் அளித்த பேட்டி:
பல ஆண்டுகளுக்கு பின், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்திய த.வெ.க., அரசுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்கிறோம். இந்த கட்டண உயர்வை முழுமையாக நடைமுறைப்படுத்த, பைக் டாக்சி சேவையை முறைப்படுத்த வேண்டும்.
அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை முழுமையாக அமல்படுத்த, அரசு சார்பில், ஆட்டோ செயலியை உருவாக்குவது அவசியம்.
‘ஓலா, ஊபர்’ நிறுவனங்களுக்கு இணையாக அரசு செயலியைத் தொடங்கினால், ஆட்டோ தொழிலாளர்களும் பொதுமக்களும் பயனடைவர்.
ஆட்டோ மட்டுமின்றி, பிற போக்குவரத்து சேவைகளுக்கும், இந்தச் செயலி பயனுள்ளதாக இருக்கும்.
எப்.சி., எனும் வாகன தகுதிச் சான்று பெறுவதற்கான கட்டணத்தில், 15 ஆயிரம் ரூபாயை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் வழங்கப்படுவதுபோல், நல வாரிய நிதி வாயிலாக ஆட்டோ தொழிலாளர்களுக்கு பண்டிகை கால போனஸ் வழங்க வேண்டும்.
அரசு உயர்த்தியுள்ள ஆட்டோ மீட்டர் கட்டண விபரங்கள் அடங்கிய அட்டையை தயாரித்து, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.