சுவாமி சகஜானந்தா மணிமண்டபத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் துவக்கம்

சிதம்பரம்: சுவாமி சகஜானந்தா மணிமண்டப வளாகத்தில், போட்டித் தேர்வு பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் கல்வி சேவையில் சிறந்து விளங்கிய சுவாமி சகஜானந்தாவிற்கு, பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கையை ஏற்று கடந்த தி.மு.க., ஆட்சியில் சிதம்பரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அதற்கு முன், சுவாமி சகஜானந்தா பணி நிறைவு பெற்றோர் சமூக அறக்கட்டளை சார்பில், அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வு பயிற்சி மையம் மற்றும் நூலகம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனையேற்று கடந்த 2018–19ம் ஆண்டு அப்போதை ராஜ்யசபா எம.பி., ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.24 லட்சம் செலவில் பயிற்சி மையமும், கலெக்டர் நிதியில் ரூ.25 லட்சம் செலவில் நுாலகம் அமைக்கப்பட்டது.

ஆனால், கடந்த 6 ஆண்டிற்கு மேல் பயிற்சி மையத்தை இயக்குவதற்கான ஆசிரியர்கள் நியமிக்காததால், பயிற்சி மையம் செயல்படாமல் இருந்தது. இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், தற்போதைய அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பயிற்சி மையத்திற்கு 9 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, கடந்த 21ம் தேதி முதல், சுவாமி சகஜானந்தா மணிமண்டபத்தில், அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி மையம் செயல்பட துவங்கியுள்ளது. இங்கு தினமும் 2 ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பயிற்சி அளித்து வருகின்றனர்.

இதில் சிதம்பரம், சீர்காழி, குமராட்சி, காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, அண்ணாமலைநகர், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 150-க்கும் அதிகமான மாணவர்கள் பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர். தற்போது தினமும் சுமார் 140 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

முதற்கட்டமாக டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, டி.ஆர்.பி., ரயில்வே, எஸ்.எஸ்.சி., மற்றும் வங்கி தேர்வு உள்ளிட்ட அனைத்து அரசு போட்டி தேர்வுகளுக்கும் கட்டணம் இல்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

பயிற்சியில் சேர விரும்புவோர் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் பயிற்சி மையத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான குறிப்பேடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சுவாமி சகஜானந்தா பணி நிறைவு பெற்றோர் சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் மணிமண்டப ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement