பழநி நில மோசடி வழக்கு ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி மடம் நிலமோசடி வழக்கில் கைதான சார்பதிவாளர் அலுவலக இளநிலை உதவியாளர், வழக்கறிஞர் ஜாமின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பழநி அடிவாரம் தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரில் சஸ்பெண்ட் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் 48, சார்பதிவாளர் அலுவலக இளநிலை உதவியாளர் சிவசங்கரி 46, போலி பத்திரம் எழுதிக்கொடுத்த விருப்பாட்சி வழக்கறிஞர் சிவக்குமார் 36, உள்ளிட்ட 8 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கில் முருகதாஸ், சேதுபதி, வெள்ளைத்துரை, ஜெயப்பிரகாஷ், ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக அக்.,23ல் மின்னணு முறையில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், சிவக்குமார், சிவசங்கரி தரப்பில் ஜாமின் கேட்டு திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவச்சந்திரன், குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவருக்கும் ஜாமின் வழங்க ஆட்சேபனை தெரிவித்தார். இருதரப்பு வாதங்களுக்கு பிறகு இருவரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement