போலீசார் நடைரோந்து விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பூவத்தி, ஆலப்பட்டி, வெலகலஹள்ளி கூட்ரோடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் குற்றங்களை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு நடைரோந்து மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட எஸ்.பி., அனிதா தலைமை வகித்தார். தாலுகா இன்ஸ்பெக்டர் மணிமாறன், தனிப்பிரிவு தலைமை காவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். ரோந்து பணியின் போது, மாவட்ட எஸ்.பி., அனிதா பொதுமக்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: மாணவ பருவத்தில் வெற்றி மற்றும் தோல்விகளை சமநிலையுடன் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்ப்பது அவசியமாகும். வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதன் மூலம் குற்றங்களைத் தடுத்து, குற்றவாளிகளை விரைந்து கண்டறிய முடியும். ஆன்லைன் பண மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் கடவுச்சொற்களை யாரிடமும் பகிராமல் இருப்பதுடன், சந்தேகத்திற்கிடமான லிங்க்கு-களை தவிர்க்க வேண்டும். போலீசாரும், பொதுமக்களும் இணைந்து செயல்படும்போது மட்டுமே குற்றமற்ற, அமைதியான சமூகத்தை உருவாக்க முடியும். இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தங்கள், எழுது பொருட்களை போலீசார் வழங்கினர்.

Advertisement