'நெல் பயிருக்கும் சொட்டு நீர் பாசனம்'

மேட்டூர்: மேட்டூர், ஓமலுார், காடையாம்பட்டி தாலுகா விவசாயிகள் குறைதீர் கூட்டம், மேட்டூர் சப் - கலெக்டர் அலுவலக அரங்கில் நேற்று காலை, 11:30 மணிக்கு நடந்தது. சப் - கலெக்டர் அம்ருதா தலைமை வகித்தார்.
அதில் நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி விவசாயிகள் குழு ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் பேசுகையில், ''அரசு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
விவசாயத்துக்கு இடையூறாக இருக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். வேளாண் துறை வழங்கும் மானியங்கள் குறித்து அலுவலர்கள் ஊராட்சிகளுக்கு சென்று விவசாயிகளுக்கு விளக்கம் தர வேண்டும்,'' என்றார்.
மேச்சேரி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜோதிபாசு, ''காய்கறி, பழங்கள், பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு பல்வேறு மானியம், காப்பீடு வழங்குகிறது.
அதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நெல் சாகுபடிக்கு தண்ணீர் பயன்பாட்டை குறைக்கவும், மேடான பகுதிகளில் நெல் சாகுபடி செய்யவும், அதற்கு தேவையான தண்ணீருக்கு அரசு விரைவில் சொட்டுநீர் பாசனம் நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளது,'' என்றார்.
அதேபோல் பல்வேறு விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளை கேட்ட சப் - கலெக்டர் அம்ருதா, ''விரைவில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். வேளாண், தோட்டக்கலை, வனத்துறை அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement