கோர்ட் உத்தரவுகளை மாற்ற நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: 'சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக, நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமைச்சரோ, அதிகாரிகளோ மாற்ற முற்படும்பட்சத்தில், மிக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்துக்கு எதிரே, 6.39 கோடி ரூபாய் செலவில், அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள், அங்கீகாரம் பெறாத கட்டடங்கள், கடைகள் குறித்து, கலெக்டரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதை பார்வையிட்ட நீதிபதிகள் கூறியதாவது:
வனத்துறை இடத்தையோ, நீர்நிலைகளையோ, கோவில் நிலங்களையோ, ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா போட்டு கொடுப்பதை, ஒரு நாளும் நீதிமன்றம் அனுமதிக்காது.
இதற்காகத்தான் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தனரா; நீதிமன்றத் தீர்ப்பு எதிராக வந்தாலும், நாங்கள் பட்டா வழங்குவோம் என, அமைச்சர் ஒருவர் பேசி உள்ளார்; எந்த தைரியத்தில், அவர் அப்படி சொன்னார் என தெரியவில்லை.
அப்படி பட்டா வழங்கினால், அரசும் அதிகாரிகளும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்; குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் தயங்காது. நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமைச்சரோ, அதிகாரிகளோ மாற்ற முற்பட்டால், அவர்கள் மிக கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியது வரும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
அதைத்தொடர்ந்து, அறநிலையத்துறை தரப்பில், பட்டா வழங்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன செய்தீர்கள்; நீதிமன்றம் விடுத்த இந்த எச்சரிக்கையை, அரசுக்கு எடுத்து சொல்லுங்கள்' என கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Advertisement