முன்னாள் தி.மு.க.,- எம்.எல்.ஏ., வீடு உட்பட 2 இடத்தில் சோதனை
நாமக்கல்:நாமக்கல்லில்,
முன்னாள் தி.மு.க., - எம்.எல்.ஏ.. வீடு உட்பட இரு இடங்களில், லஞ்ச
ஒழிப்புத் துறை போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
தி.மு.க., முன்னாள்
அமைச்சர் நேருவுக்கு சொந்தமான, 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச
ஒழிப்புத் துறை போலீசார், நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மோகனுார் சாலையில் உள்ள, எம்.ஜி. நகரில்
வசிக்கும் தி.மு.க., நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏ., ராமலிங்கம்
வீட்டுக்கு நேற்று காலை, 7:00 மணியளவில் ஈரோடு, நாமக்கல் மாவட்ட லஞ்ச
ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையில், 8
பேர் கொண்ட போலீசார் சோதனை நடத்த வந்தனர்.
அப்போது ராமலிங்கம்
நடைபயிற்சிக்கு சென்றிருந்ததால் வீட்டில் இல்லை. அவரை போனில் தொடர்பு
கொண்டு போலீசார் வரவழைத்தனர். அவர் வந்த பிறகு சோதனையை துவக்கினர்.
அரசு ஒப்பந்ததாரராக பல்வேறு பணிகளை செய்துள்ள நிலையில், அவரது
வீட்டில் சோதனை நடந்தது. மாலை, 4:00 மணியளவில் சோதனையை முடித்து
விட்டு புறப்பட்டு சென்றனர். எவ்வித முக்கிய ஆவணங்களையும்
கைப்பற்றவில்லை எனவும், சோதனை முடிந்து செல்லும்போது,
ராமலிங்கத்திடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையெழுத்து மட்டும் வாங்கி
சென்றுள்ளனர்.
இதேபோல், நேருவின் உறவினரான துரை என்பவரது வீடு,
மோகனுார் சாலை கலைவாணி நகரில் உள்ளது. அங்கும், லஞ்ச ஒழிப்புத்துறை
போலீசார் சோதனைக்கு சென்றனர். துரை குடும்பத்துடன் வெளிநாடு
சென்றிருந்ததால் வீடு பூட்டப்பட்டிருந்தது. அவருக்கு தகவல்
தெரிவித்த போலீசார், 4:00 மணி நேர காத்திருப்புக்கு பிறகு, அவரது
சகோதரர் மற்றும் உறவினர்களை வரவழைத்தனர்.
வருவாய்த் துறையினர்
முன்னிலையில், வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்ற போலீசார்,
அங்கிருந்த சில ஆவணங்களை கைப்பற்றினர். வெளிநாட்டில் இருந்து
திரும்பியதும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்து, அவரது
வீட்டு கதவில் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.