அரசுப்பணி செய்யவிடாமல் தடுப்பு த.வெ.க., ஒன்றிய செயலர் மனு

நாமக்கல்:'த.வெ.க., நிர்வாகிகள் எனக்கூறி, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, த.வெ.க., ஒன்றிய செயலாளர் சதீஷ், நாமக்கல் எஸ்.பி.,யிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த, 20ல் பெய்த கனமழை காரணமாக, ப.வேலுார் - மோகனுார் செல்லும் நெடுஞ்சாலை பகுதிகளில் மழைநீர் புகுந்தது. குறிப்பாக, பாரதி நகர், இந்திரா நகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களில், மழைநீர் புகுந்தததால், கடந்த, 28ல், நான் உள்ளிட்ட நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் துணையோடு, மழைநீரை அப்புறப்படுத்தினோம். அப்போது, அங்கு வந்த சிலர், நாங்கள் த.வெ.க, விவசாய சங்க பிரதிநிதிகள். எங்களை மீறி எவ்வித மழைநீரையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க கூடாது எனக்கூறி, எங்களையும், அரசு அதிகாரிகளையும் தரக்குறைவாக பேசி, அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டினர்.
அதனால், த.வெ.க., அரசுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயரை உருவாக்கும் நோக்கில் இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement