காதலை கைவிட மறுத்த சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்த ‘பாசக்கார’ தந்தை: வானுார் அருகே பயங்கரம்

வானுார்: வானுார் அருகே காதலை கைவிட மறுத்த மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

வானுார் அடுத்த வி.பரங்கனி கே.எஸ்.ஆர்., நகரை சேர்ந்தவர் சிவசாத்திரி, 40; டிப்பர் டிரைவர். இவரது மனைவி விமலா. இந்த தம்பதியின் மூத்த மகள் சிவமகி, 16; இளைய மகள், விகாஷினி, 14; இதில் விகாஷினி ராணிப்பேட்டையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். அப்போது, விகாஷினி, அதே கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்தார்.

இந்த விஷயம் வீட்டிற்கு தெரிய வந்ததால், விகாஷினியை பெற்றோர் கண்டித்ததோடு, விகாஷினியை அங்கிருந்து

வி.பரங்கனி கிராமத்திற்கு அழைத்து வந்தனர்.

கடந்த மூன்று மாதங்களாக வானுார் அடுத்த கரசானுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த விகாஷினி மீண்டும் அந்த வாலிபருடன் பேச்சை தொடர்ந்தார்.

இதனை அவரது பெற்றோர் பலமுறை கண்டித்தனர். ஆனாலும் அவர் அதை கேட்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தாய் விமலா, வேலுாருக்கு ஒரு துக்க நிழ்ச்சிக்கு சென்றார். இரவு விகாஷினி வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது, தந்தை சிவசாத்திரி, ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்துள்ளார். மேலும்,

விகாஷினியை கொலை செய்து விட்டதாக, சகோதரரான சசிக்குமார் என்பவருக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு கூறி உள்ளார்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வந்து, மயக்க நிலையில் இருந்த விகாஷினியை மீட்டு, வானுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த வானுார் போலீசார், கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வானுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிவசாத்திரியை கைது செய்தனர்.

Advertisement