தரமற்ற விதையால் வெண்டை பயிர்கள் வீண் விவசாயிகள் வேதனை

விழுப்புரம்: தரமற்ற விதை காரணமாக, வெண்டை பயிர்கள் வீணாகி விட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

விழுப்புரம் அருகே கோலியனுார் வட்டாரத்திற்கு உட்பட்ட பிடாகம், வேலியம்பாக்கம், அத்தியூர் திருவாதி, சித்தாத்துார் உள்ளிட்ட சுற்று பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், 150 ஏக்கர் பரப்பளவில், வெண்டை பயிரிட்டுள்ளனர்.

கடந்த மாதம் பயிரிடப்பட்ட அந்த வெண்டை பயிர்கள் வளர்ந்து, தற்போது காய்த்து அறுவடை துவங்கியுள்ளது. இந்நிலையில், செடிகளில் வெண்டை காய்கள், வழக்கத்திற்கு மாறாக பச்சை நிறத்திற்கு மாறாக, மஞ்சள் நிறத்தில் பழுத்தது போன்று காய்த்து, வீணாகி உள்ளது.

இதனால், வேதனையடைந்த விவசாயிகள் வேளாண் துறையினரிடம் புகாரளித்துள்ளனர். ஆய்வு செய்ததில், தரமற்ற விதையின் காரணமாகவே, வெண்டை பயிர்கள் வீணாகிப் போனது தெரியவந்தது. இதனால், விரக்தியடைந்த விவசாயிகள், இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று மதியம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெண்டைக்காய் மூட்டைகளுடன் திரண்டு வந்து, வேளாண் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

கலெக்டர் அலுவலகத்தில், வெண்டைக்காய்களை கீழே கொட்டி பாதிப்பு குறித்து விளக்கினர். அப்போது, ‘விழுப்புரத்தில் வாங்கிய புதிய வெற்றி ரக விதை சரியில்லாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தரமற்ற விதை விற்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம். ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் செலவிட்டது வீணாகிவிட்டது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,’ என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது, கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பழனிசாமியிடமும், விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அவர், வேளாண் துறையினரிடம், நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.

Advertisement