ஒழுங்குமுறை விற்பனை கூட எடை பணி தொழிலாளர் சங்கத்தினர் 2ம் தேதி போராட்டம்

திருக்கோவிலுார்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வியாபாரிகளின் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படும் எடை பணி தொழிலாளர்கள் வரும் 2ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சரவணன் செய்திக்குறிப்பு:

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வியாபாரிகள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமலும், எடை பணி தொழிலாளர்கள் வேலை இன்றியும் தவித்து வருகின்றனர்.

தீபாவளி நெருங்கும் நேரத்தில் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக முதல்வர் விஜய் உடனடியாக தலையிட்டு, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பழைய இ–நாம் மற்றும் விர்ச்சுவல் அக்கவுண்ட் நடைமுறையை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்.

புதிய 2.0 நடைமுறையில் உள்ள தொழில்நுட்ப மற்றும் பணம் பரிவர்த்தனை சிக்கல்களை சரி செய்ய வேண்டும். இது தொடர்பாக விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.

இல்லையென்றால் தமிழகம் முழுதும் வரும் 2ம் தேதி தொழிலாளர்களை திரட்டி, தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூட எடை பணி தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement