டவுன் பஞ்., துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்குவதில்லை என குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல் பணிபுரியும், துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தில் உணவு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணத்தில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, 50க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கடந்த பிப்ரவரி முதல், காலை உணவு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சில வாரங்களாக காலை உணவு வழங்கப்படவில்லை. ஆனால் காலை, 7:00 மணியிலிருந்தே பசியோடு பணியை செய்து வருவதாக துாய்மை பணியாளர்கள் கூறினர். மேலும், காலை உணவு டெண்டர் எடுத்த சிற்றரசன் என்பவருக்கு டவுன் பஞ்., நிர்வாகம் பணம் வழங்காததால், அவர் உணவு வழங்கவில்லை என்றும் கூறினர்.

டவுன் பஞ்., செயல் அலுவலர் ராணி கூறுகையில், ''டவுன் பஞ்., துாய்மை பணியாளர்களுக்கு டெண்டர் எடுத்தவர், முறையான உணவு வழங்கவில்லை. ஒவ்வொரு நாளும், ஒரு உணவு வழங்க வேண்டும் என்ற விதிமுறையை பின்பற்றவில்லை.

இருப்பினும், மாதந்தோறும் அவருக்கு உணவு செலவுக்கான தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது, நிர்வாகத்தில் பணம் இல்லாததால், சில நாட்கள் தாமதமானது. அதற்காக, உணவே வழங்காமல் நிறுத்தியது குறித்து விசாரிக்கப்படும். உணவு சரியாக வழங்காத பட்சத்தில் டெண்டரை ரத்து செய்யப்பட்டு, புதிய நபர்களுக்கு விடப்படும்,'' என்றார்.

Advertisement