போலீசாருடன் வாக்குவாதம் செய்த ப.ம.க., தலைவர் மீது வழக்கு பதிவு

துாத்துக்குடி:

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட, பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கிராஜா, 46, மீது வழக்கு பதியப்பட்டது.

துாத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியை சேர்ந்தவர் இசக்கிராஜா. பசும்பொன் மக்கள் கட்சி தலைவர். கடந்த சட்டசபை தேர்தலில் சசிகலா கட்சி சார்பில் சாத்துார் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இசக்கிராஜா நேற்று (அக்.,29) தன் ஆதரவாளர்களுடன், 40 கார்களில் துாத்துக்குடியில் இருந்து பசும்பொன் புறப்பட்டு சென்றார். காவல்துறை தரப்பில் விதிக்கப்பட்டிருந்த நிபந்தனையை மீறி, ஒரு காரின் மேலே 'கேரியர்' இருந்துள்ளது. அதை அகற்றுமாறு போலீசார் கூறியதைத் தொடர்ந்து, அவர்களுடன் இசக்கிராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரை மணி நேரத்திற்கு பின், இசக்கிராஜா தன் ஆதரவாளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக இசக்கிராஜா மீது போக்குவரத்துக்கு இடையூறு செய்தது, போலீசாரை பணி செய்யவிடாமல் தகராறு செய்தது ஆகிய பிரிவுகளின் கீழ், தென்பாகம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

துாத்துக்குடியில் உள்ள ஒரு நகைக்கடை உரிமையாளரிடம், ஒரு கோடி கேட்டு இசக்கிராஜா மிரட்டியதாக ஏற்கனவே புகார் எழுந்தது. அந்த வழக்கில், கடந்த மாதம் 22ல் தென்பாகம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இசக்கிராஜா, தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

Advertisement