ஊரை விட்டு ஒதுக்கியதாக எஸ்.பி.,யிடம் தம்பதி மனு
கடலுார்: தங்ககளை ஊரை விட்டு ஒதுக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, மூத்த தம்பதி இன்று (அக்.,30) எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கடலுார் அடுத்த சாமியார்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜ்குமார்,73; இவர், தனது மனைவியுடன் கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் இன்று அளித்த மனு:
எனது பூர்வீக இடத்தில் மனைவியுடன் வசிக்கிறேன். எனது இரண்டு மகன்கள் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். எனது வீட்டின் அருகில் உள்ள புறம்போக்கு இடத்தில் பல பேர் வசித்தனர். அதில், எனது அக்காவும், தாயாரும் வசித்தனர். இருவரும் இறந்ததால் அந்த இடம் எனது அனுபவத்தில் உள்ளது.
நாங்கள் வெளிநாடு சென்ற போது, அந்த இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிக்க முயன்றார். இது தெரிய வரவே தடுத்து விட்டோம். ஆத்திரமடைந்த அந்த நபர், சிலருடன் சேர்ந்து எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக கூறி தீர்மானம் நிறைவேற்றினர்.
சில நாட்களுக்கு முன் ஆக்கிரமிப்பாளர்கள், எனது வீட்டையும், எனது அக்கா வீட்டையும் தீ வைத்து கொளுத்த போவதாக மிரட்டினர். எங்களுக்கு பாதுகாப்பு வழங்கி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.