கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை: தொழிலாளர் துறை எச்சரிக்கை

குன்னுார்: ‘நீலகிரி மாவட்டத்தில் கடைகளில் பால் பாக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்றாலோ, எடையளவு விதிகளை மாற்றினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என, தொழிலாளர் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீலகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளுக்கான காலாண்டு கூட்டம், குன்னுார் தொழிலாளர் உதவி ஆணைய (அமலாக்கம்) அலுவலகத்தில் நடந்தது.

அதில், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம் - பொறுப்பு) முருக பிரசன்னா தலைமை வகித்து பேசுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் உள்ள பால் விற்பனை நிலையங்கள் மற்றும் கடைகளில் பால் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது.

அனைத்து பொட்டல பொருட்களிலும் அரசு விதிகளின்படி உரிய விவரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும், அவற்றின் எடையை நுகர்வோர் சரி பார்க்கும் வகையில் கடைகளில் எடை கருவிகள் வைத்திருக்க வேண்டும். பொருட்களை எடையிடும்போது தராசுகள நகர்வோர் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். அனைத்து எடை கருவிகளையும் காலமுறைப்படி முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும். விதிகளை மீறும் நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது சட்டம் மற்றும் விதிகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Advertisement