தி.மு.க., ‘மாஜி’ நேரு மீதான ஊழல் வழக்கு ‘டிவி’ நடிகையர் பக்கம் திரும்புகிறது விசாரணை

சென்னை: தி.மு.க., ஆட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த ஊழல் பணத்தில், கோடிக்கணக்கான ரூபாய், ‘டிவி’ நடிகை வங்கி கணக்குகளுக்கு சென்று இருப்பதால், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த தி.மு.க., ஆட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு இருந்தார். அந்த துறையில், டெண்டர் ஒதுக்கீடு, பணி நியமனம், பணியிட மாறுதலில், 1,020 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம், நேரு மற்றும் அவரது தம்பிகள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் உள்ளிட்டோர் வீடு, அலுவலகம் உட்பட, 25 இடங்களில் சோதனை நடத்தி, 170 ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:

நேரு மற்றும் அவரின் தம்பி ரவிச்சந்திரனின் நிழல் போல செயல்பட்டு வந்த கவிபிரசாத் என்பவரை விசாரித்து வருகிறோம். அவர் அளித்த தகவலின்படி, தற்போது விசாரணை நடக்கிறது. ஊழல் பணம் வசூலிப்பதற்காக, கவிபிரசாத் தலைமையில் குழு ஒன்று செயல்பட்டு வந்ததுள்ளது.

அதில், அசோக், பொன்னம்பலம், தங்கவேல், ரகு, சீனிவாசன், முத்துக்குமார் என்பவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கும் ஊழலுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருகிறோம். மேலும், 100 கோடிக்கும் குறைவான டெண்டர் விவகாரங்களை கவிபிரசாத்தும், அதற்கு மேல் உள்ள தொகையை செல்வமணியும், ‘டீல்’ செய்துள்ளனர்.

இவர்கள், ஒப்பந்ததாரரர்களிடம் கட்சி நிதி என, திட்டப் பணியில், 7.5 – 10 சதவீதம் வரை லஞ்சமாக வசூலித்துள்ளனர். ஊழல் பணத்தில், கவிபிரசாத் தலைமையில் புதுச்சேரியில் சோபாக்கள் தயாரிக்கும் தொழில் தொடங்கப்பட்டு உள்ளது. அவற்றை இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.

மேலும், கவிபிரசாத் தலைமையிலான குழுவினரிடம் இருந்து, கோவையைச் சேர்ந்த, 34 வயதான ‘டிவி’ நடிகைக்கும், சென்னையைச் சேர்ந்த, 26 வயது ‘டிவி’ நடிகைக்கும் வார இறுதி நாட்களில் பல கோடி ரூபாய் கைமாறி உள்ளது.

கமிஷன் அடிப்படையில் பணம் பெற்று, அவற்றை, கவிபிரசாத் கும்பல் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு நடிகையர் அனுப்பி வந்ததும் தெரியவந்துள்ளது. இது பற்றியும் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement