அமைச்சர் நிர்மல்குமார் பதவி விலக வேண்டும்: பா.ஜ., சீனிவாசன் வலியுறுத்தல்

மதுரை: தேனி சிறை கைதிகள் தப்பிய சம்பவத்திற்கு பொறுப்பேற்று அதற்கான துறை அமைச்சர் நிர்மல்குமார் பதவி விலக வேண்டும் என பா.ஜ., பொது செயலாளர் சீனிவாசன் வலியுறுத்தினார்.

மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, பின் அவர் கூறியதாவது:

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம், பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகளையே வெளிப்படுத்துகிறது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று அத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பதவி விலக வேண்டும்.

தேவர் ஜெயந்தி விழா அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் போலீசாரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. காளையார்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கட்சிகளின் கொடி கட்ட அனுமதி வழங்கவில்லை. ஆனால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது. அதிக கட்டுப்பாடுகளால் பெண்கள் பங்கேற்பது குறைகிறது. எளிதில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி சென்றபோது மின்தடை ஏற்பட்டது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கை காட்டுகிறது. முதல்வர் விஜய் வருகையின்போது இதுபோல் ஏற்படுமா. இவ்வாறு கூறினார்.

Advertisement