வட்டார செய்திகள்

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் விடுபட்ட

1,400 குளம், குட்டைகளுக்கு எப்போது விடிவு?

பெருமாநல்லுார்: அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள 1,400 குளம், குட்டைகளை இரண்டாம் கட்டத்தில் இணைக்க வலியுறுத்தி ஊர்வலம், கருத்தரங்கம் நடைபெற்றன.

பொங்காளியம்மன் கோவில் திடலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், ஊத்துக்குளி ரோடு வழியாக கொங்கு மஹாலை அடைந்தது. கருத்தரங்குக்கு மாரிமுத்து தலைமை வகித்தார். பூமாலை முன்னிலை வகித்தார்.

அறத்தமிழன் பேரியக்க தலைவர் விஜய் சீதாராமன், விடுபட்ட குளம், குட்டைகளை திட்டத்தில் இணைப்பதன் அவசியம் குறித்து பேசினார்.

கிடைக்கும் வெள்ள உபரி நீரை, சிறிய சமநிலை நீர்த்தேக்கங்கள் மூலம் சேமித்து, வறட்சி பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் வகையில், பசுமை நீர் வலைப்பின்னல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணியன், முருகபூபதி, பெரியசாமி, சம்பத்குமார், சாமியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Pic: tpr p6 29.10

ஆழமில்லாத அகழியால் விலங்குகளுக்கு வசதி

பயிர்கள் அழிவதாக விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி: ‘யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த, வனத்துறை வெட்டிய அகழி ஆழமில்லை; வனவிலங்குகள் எளிதாக விளைநிலங்களுக்கு வந்து செல்கின்றன,’ என, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பொள்ளாச்சி சப் – கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. சப் – கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.

விவசாயிகள் பேசியதாவது: நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட ரோடுகளில் புதர்கள் அதிகளவு வளர்ந்துள்ளன. ரோட்டோரம் வளர்ந்துள்ள புதரை முறையாக அகற்ற வேண்டும்.

தென்னை மரங்களுக்கான நிவாரண நிதி விவசாயிகளுக்கு முறையாக வழங்கவில்லை. எப்போது கேட்டாலும் இன்னும் நிதி வரவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

சோலார் பம்ப் அமைக்க மானியம் கேட்டாலும் இதே பதிலை கூறுகின்றனர். இதனால், விவசாயிகள் பாதிக்கப் படுகின்றனர்.

பொள்ளாச்சி – வால்பாறை ரோடு ஆவல்சின்னாம்பாளையம் அருகே ரோட்டில் செல்லும் மழைநீர், ஆழியாறு புதிய ஆயக்கட்டு கால்வாயில் கலக்கிறது. இதை தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆழியாறு பகுதியில் காட்டு யானையால், விளை பயிர்கள் சேதமாகின்றன. புதிததாக நட்ட தென்னங்கன்றுகளை பிடுங்கி போடுவதால் சேதம் அதிகம் உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வனத்துறையிடம் கோரிக்கை விடுத்ததால், அகழி வெட்டினர்.

ஆனால், அந்த அகழியும் ஆழமில்லை. இதனால், காட்டுப்பன்றிகள், வனவிலங்குகள் எளிதாக வந்து செல்கின்றன. வேலி அமைத்து தந்தால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

அதே போன்று, காட்டுப்பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தோட்டத்துக்குள் புகுந்து விளை பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதை கட்டுப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும், மனு கொடுத்தும் வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. காட்டுப்பன்றி வந்த பின், வனத்துறைக்கு தகவல் கொடுத்து அவர்கள் வருவதற்குள் அவை பயிரை சேதப்படுத்தி விடுகின்றன.

சிறு தானிய பயிர்களை சாகுபடி செய்ய அரசு வலியுறுத்தினாலும், காட்டுப்பன்றி தொல்லையால் பாதிப்பை மட்டுமே சந்திக்கிறோம். பி.ஏ.பி., கால்வாய் துார்வாரும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பரம்பிக்குளம் – செமணாம்பதி ரோடு பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இவ்வாறு பேசினர்.

சப் – கலெக்டர் பேசுகையில், ‘‘ வனத்துறை வாயிலாக கூட்டம் நடத்தி, வனவிலங்குகள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்,’’ என்றார்.

Pic: Pol p1 29.10

தென்னை மரத்தில் கள் இறக்கி விற்றவர்கள் கைது

ஆவேச விவசாயிகள் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஸ்டேஷனை, உழவர் உரிமை சங்க விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி அருகே, புளியம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சுந்தர்ராஜ்,54, உதயகுமார்,50, ஆகியோர் தென்னந்தோப்பில் கள் இறக்கி விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்த மகாலிங்கபுரம் போலீசார், இருவரையும் கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து, ஜாமினில் விடுவித்தனர்.

தகவல் அறிந்த, உழவர் உரிமை சங்க விவசாயிகள், மகாலிங்க புரம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க நிர்வாகி முருகானந்த கிருஷ்ணன் கூறியதாவது:

தென்னை மரங்கள் பல்வேறு நோய் தாக்குதல், தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்கின்றனர். அவர்கள் மீது போலீசார் தொடர்ந்து வழக்கு பதிவு செய்கின்றனர்.

புளியம்பட்டியை சேர்ந்த இரண்டு விவசாயிகளை அழைத்து வந்து சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஸ்டேஷனை முற்றுகையிட்டுள்ளோம். இதற்குரிய தீர்வு காணும் வரை கலைந்து செல்ல மாட்டோம். இவ்வாறு, கூறினர்.

இதையடுத்து, போலீசார் சமரச பேச்சு நடத்தி, இதுபோன்று பிரச்னைகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி அளித்தனர். அதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Pic: p4 Pol 29.10

நிலச்சரிவால் கிராமங்களில் முடங்கிய வாழ்க்கை

நோயாளிகள் அவசர சிகிச்சை பெறுவதில் சிரமம்

குன்னுார்: குன்னுார்– மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் மலை பாதையில், உள்ள பழங்குடியின மக்கள் வாழ்வாதாரம் ஸ்தம்பித்துள்ளது.

குன்னுார் – மேட்டுப்பாளையம் மலை பாதையில் உள்ள பல கிராமங்களில், 183 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கனமழையால் ஏற்பட்ட மண் சரிவுகளால் போக்குவரத்து முடங்கி புதுக்காடு, வடுகதோட்டம், சின்ன குரும்பாடி மற்றும் பெரிய குரும்பாடி, கோழிக்கரை கிராம பழங்குடியினர் மற்றும் பர்லியார் வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

பால் வினியோகம் முற்றிலும் முடங்கியதால் குழந்தைகளுக்கு கொடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. நடை பாதையில் விழுந்த மரம் அகற்றப்படாததால், ஆபத்தான ஒற்றை சரிவுபாதையில் நடந்து செல்கின்றனர்.

மாணவ, மாணவிகள் மேட்டுப்பாளையம், குன்னூர் பகுதிகளில் உள்ள பள்ளிக்கு செல்ல முடியாமல் உள்ளனர். ரேஷன் பொருட்களை வாங்க பர்லியார் பகுதிக்கு, 3 கி.மீ. தூரம் நடக்க வேண்டியுள்ளது.

புதுக்காட்டில் யானை தாக்கி காயமடைந்த பொன்னியம்மாள்,73, என்பவர் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்ல வழி இல்லாததால் நேற்று இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பழங்குடியினர் கூறுகையில், ‘நடைபாதையில் விழுந்த மரத்தை அகற்றாததால், புதுக்காட்டில் யானைதாக்கி காயமடைந்த பொன்னியம்மாளுக்கு, 'நாவா' டாக்டரும் சிகிச்சை அளிக்க கிராமத்துக்குள் வர முடியவில்லை. இரண்டு நாட்களாக உணவு தண்ணீர் உட்கொள்ளாமல் உயிரிழந்தார்,’ என்றனர்.

இயற்கை சீற்றம் தடுக்க முடியாது தான் என்றாலும், அதன் பிறகு மோசமாக பாதிக்கப்படும் மக்களை அரவணைத்து காப்பாற்ற அதிகார வர்க்கம் தவறி விட்டது என மக்கள் குமுறுகின்றனர்.

திருமூர்த்தி, ஆலு குரும்பா தலைவர்: நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும், விழுந்து கிடக்கும் பிரமாண்ட மரங்கள் அகற்றப்படவில்லை. பிரதான சாலையில் நடக்கும் சீரமைப்பு பணிகள், கிராமங்களில் செய்வதில்லை, வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பஞ்சாயத்து நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வில்லை.

சாந்தி, சின்ன குரும்பாடி: வீடுகளில் முடங்கிய பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. தனியாக வாகனம் வைத்து அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

கார்த்திகா, சின்ன குரும்பாடி: வாகன போக்குவரத்து இல்லாததால் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியவில்லை. மாற்று வழியாவது மக்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

டெய்சி, பர்லியார் மலர் நாற்று வியாபாரி: ‘பர்லியாரில் தங்க வேண்டாம்’ என்ற உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் சென்றோம். இதனால், மலர் நாற்றுக்கள் தண்ணீர் ஊற்றாமல் வாடியது. அங்கிருந்து வருவதற்கு கூட அனுமதிக்கவில்லை. மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

தாசில்தார் செந்தில்குமார் கூறுகையில்,‘‘புதுக்காடு நடைபாதையில் விழுந்த மரத்தை பொக்லைன் உதவியுடன் அகற்றவும். பலர் முகாம்களுக்கு சென்றதால், பால் வினியோகத்தை நிறுத்தினோம். மீண்டும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,’’என்றார்.

Pic: p4 Ooty 29.10

Advertisement