அரசு கட்டிக்கொடுத்த அரைகுறை வீடு: கதவு கூட இன்றி இருளர் மக்கள் அவதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு போதிய நிதி ஒதுக்காததால், இருளர் இன மக்களுக்கு அரசு கட்டி கொடுத்துள்ள வீடுகள் அரைகுறையாக காட்சியளிக்கின்றன. கதவு கூட இல்லாத நிலையில், பாதுகாப்பின்றி வசிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை மலை குகையில், 40 ஆண்டுகளுக்கு முன் இருளர் இன மலைவாழ் மக்கள் வசித்தனர். அவர்களுக்கு வீடு கட்டித் தருவதாக அரசு அதிகாரிகள் அழைத்து, மலை அடிவார பகுதியிலுள்ள மாட்டுமந்தையில், 10 பேருக்கு வீடு கட்டி கொடுத்தனர்.

அந்த வீடுகள் சேதமடைந்ததால், 3 ஆண்டுகளுக்கு முன், 10 வீடுகளையும் இடித்து விட்டு, அதே இடத்தில் மீண்டும் வீடு கட்டித்தர, இருளர் இன மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஏழு வீடுகளுக்கு மட்டும் அரசு நிதி ஒதுக்கியது.

அந்த வீடுகளை, பயனாளிகளே கட்டிக்கொள்ள வேண்டும். ஆனால், அதிகாரிகள், மகாராஜகடையை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் மூர்த்தி என்பவரிடம், அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் பணியை ஒப்படைத்தனர்.

ஒவ்வொரு வீட்டிற்கும், 2.40 லட்சம் ரூபாய் மட்டும் நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அதையும் முறையாக ஒதுக்காமல், மூன்று தவணைகளாக, 1.60 லட்சம் ரூபாய் மட்டுமே விடுவிடுத்துள்ளனர்.

இந்த தொகையில் மட்டும் அரைகுறையாக பணிகளை செய்து, பணத்தை பெற்றுக் கொண்டு மூர்த்தி ஒதுங்கிவிட்டார். ஆட்சி மாறியதால், அடுத்த கட்ட நிதி விடுவிப்பு இன்றி, ஏழு வீடுகளும் அரைகுறையாகவே உள்ளன.

இருளர் இனத்தை சேர்ந்த வேடியப்பன், 42, கூறுகையில், ''அரசு, 10 வீடுகளை இடித்துவிட்டு, 7 பேருக்கு தான் வீடு கட்டி கொடுக்கிறது. அதையும் முழுமையாக கட்டவில்லை. கதவு, ஜன்னல், தரை கூட அமைக்கவில்லை. வீட்டின் உள்ளே, வெளியே சிமென்ட் பூச்சு வேலை செய்யவில்லை. பாதுகாப்பின்றி வசிக்கிறோம்,'' என்றார்.

பர்கூர் பி.டி.ஓ., சரவணனிடம் கேட்டபோது, ''முதல்வரின் மறு கட்டமைப்பு திட்டத்தில் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன. இன்னும் ஒரு வாரத்தில், கதவு, ஜன்னல் வைத்து தரப்படும்,'' என்றார்.

Advertisement