டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்; மது பிரியர்கள் திண்டாட்டம்
- நமது நிருபர் குழு -
தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடையில் பணிபுரியும் ஊழியர்கள், காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் பணியில் தங்களை ஈடுபடுத்துவதை கைவிட வலியுறுத்தி, நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு மது கடைகளை திறக்காமல், போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் அதிகாரிகள் பேச்சு நடத்திய நிலையில், சில இடங்களில் கடைகள் திறக்கப்பட்டன. எனினும், 1,300 கடைகள் திறக்கப்படவில்லை. நேற்று இரண்டாம் நாளாக, 655 கடைகளை திறக்காமல், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூடப்பட்ட கடைகளுக்கு வந்த 'குடி'மகன்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மற்ற பகுதிகளில் உள்ள நண்பர்களுக்கு போன் செய்து, 'அங்கு கடை திறந்துள்ளதா?' என, ஏக்கமாக விசாரித்துக் கொண்டிருந்தனர்.
'சஸ்பெண்ட்'
திறந்திருந்த கடைகளிலும், மது பிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னையில் சில பகுதிகளில், குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மதுபானம் வாங்கி சென்றனர். போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தினர்.
கடைகள் தொடர்ந்து அடைக்கப்பட்டால், மது கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனக்கருதி, நேற்று பலரும் கூடுதல் மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.
கடைகள் திறக்கப்படாத விவகாரத்தில், நேற்று நிலவரப்படி, 1,731 ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அவர்களிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை, 245 ஊழியர்கள் அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
சென்னை, அம்பத்துார் தொழிற்பேட்டையில், தமிழ்நாடு வாணிப கழகத்தின் டாஸ்மாக் கிடங்கு மற்றும் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் உள்ளது. அங்கு, டாஸ்மாக் தொழிற்சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், இரண்டாவது நாளாக கொட்டும் மழையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடைகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால், கும்மிடிப்பூண்டி பகுதி மது பிரியர்கள் 8 கி.மீ., தொலைவில் உள்ள ஆந்திர மாநில மதுக்கடைகளுக்கு, நேற்று படையெடுத்தனர்.
சேலம் மாவட்டத்தில், முன்னறிவிப்பு இல்லாமல் கடைகளை மூடியதற்கு விளக்கம் கேட்டு, 111 ஊழியர்களுக்கு வாட்ஸாப் மூலம் அதிகாரிகள், 'மெமோ' வழங்கினர்.
தள்ளுமுள்ளு
நாமக்கல் மாவட்டம் முழுதும், 155 டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நேற்று, 5 கோடி ரூபாய்க்கு விற்பனை பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலுாரில் காலி மது பாட்டிலை 'ஸ்கேன்' செய்து வாங்காததால், அதிருப்தியில் மது பிரியர்கள், காலி பாட்டிலை உடைத்து சென்றனர்.
திருச்சி மாவட்டத்தில், 138 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், குடிமகன்கள் மது கிடைக்காமல் அவதியடைந்தனர். அங்கு, எப்.எல்., 2 எனப்படும் மனமகிழ் மன்றங்களில் விற்பனை பல மடங்கு அதிகரித்தது.
தர்மபுரி மாவட்டம், அரூரில், மனமகிழ் மன்றத்தில் மது வாங்க குவிந்த குடிமகன்களால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். மதுபாட்டிலுக்கு கிராக்கி ஏற்பட்டதால், பாட்டிலுக்கு, 70 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாக அங்கு மது பிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, டாஸ்மாக் கடைகளுக்கு, காலி பாட்டில் கையாளுதல் கட்டணமாக, நாள் ஒன்றுக்கு, 750 முதல், 2,000 ரூபாய் வரை வழங்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தர விட்டுள்ளது. இந்த கட்டணம் கடை அமைந்துள்ள இடம், தினசரி விற்பனை அளவு ஆகியவற்றை கணக்கிட்டு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


@block_B@
டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மது கடைகளை திறக்க வேண்டும். கடை ஊழியர்கள் வரவில்லை என்றால், கிடங்குகளில் பணிபுரியும் ஊழியர்கள், மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள் என, யாரையாவது பயன்படுத்தி கடைகளை திறக்கும்படி, மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசின் கொள்கை முடிவுக்கு கட்டுப்படாமல், ஊழியர்களை போராட்டத்திற்கு துாண்டுவோர் மீது, 'டிஸ்மிஸ்' நடவடிக்கை எடுக்கவும் உத்தர விடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.block_B
@block_B@
கோவையில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் நேற்று அளித்த பேட்டி: கடந்த ஆறு மாதங்களில் ஐந்து முறை டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடந்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்களிடம் பணம் வசூலிக்க வேண்டும் என, கடந்த ஆட்சியாளர்கள் அறிவுறுத்தியதே தற்போதைய பிரச்னைக்கு காரணம். காலி மதுபாட்டில்களை ஊழியர்கள் முறையாக கையாண்டதாக கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு காலி பாட்டில்கள் திரும்ப வரவில்லை. இதைத்தான் அரசு கேள்வி கேட்கிறது.
பாட்டில்கள் வரவு வைக்கப்பட்ட அளவு, பணம் வரவில்லை. தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல், காலி மதுபாட்டில் விவகாரம் தான். பாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறையை வெளிப்படையாகவும், முறையாகவும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் காலி பாட்டில்களை ஒப்படைக்கும் நடைமுறை இன்னும், 20 நாட்களில் அமல்படுத்தப்படும். இதற்காக, 40 ஆயிரத்து 48 இயந்திரங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடை ஊழியர்களுக்கு, 34 ஆயிரம் ரூபாய் சம்பளம், வார விடுமுறை, மருத்துவ காப்பீடு, பண்டிகை காலங்களில், 20 ஆயிரம் ரூபாய் சலுகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடைகளில் பணிபுரிவோர் மட்டும் சீருடை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.
கடைகளை மூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை நடக்கிறது. கடைகளில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுவர். மாற்று பணியாளர்களை நியமித்து கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.block_B
மேலும்
-
ரயில்களில் கடத்தி வந்த 5 கிலோ கஞ்சா 6 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்
-
மொபைல் திருடிய வழக்கில் 2 பேர் கைது
-
சாலை வசதி செய்து தரக்கோரி மக்கள் மறியல் போராட்டம்
-
சேலம் சீலநாயக்கன்பட்டியில் 'உதயம்' வேட்டி, சட்டை ேஷாரூம் திறப்பு விழா
-
வாழப்பாடியில் சாரல் மழை
-
மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாம்பியன்