தினமும் ரூ.15 ஆயிரத்துக்கு டீ, மேகி விற்கும் வியாபாரி

பால் ஊற்றி வழிபட்ட நதியை பாழாக்கிய செயலுக்கு எதிர்ப்பு



அசாமின் திப்ருகரில், முன்னோர் வழிபாட்டுக்காக பிரம்மபுத்ரா நதியில் பால் ஊற்றிய ஒருவர், பால் வாங்கி வந்த பாக்கெட்டையும் ஆற்றிலேயே வீசிய வீடியோ வைரலாகியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த நவீன் ரெட்டி, வலைதளத்தில் இதைப் பகிர்ந்து, 'இச்செயலை ஏற்க முடியாது' என்று கூறியுள்ளார்.

Latest Tamil News
'உங்கள் நம்பிக்கையை மதியுங்கள்; அதே நேரத்தில் இயற்கையையும் மதியுங்கள். பிரம்மபுத்ராவைத் துாய்மையாக வைத்திருங்கள். குப்பையை போடுவது, நீர் நிலையை வழிபடுவதன் நோக்கத்தை தோற்கடித்து விடுகிறது' என்கிறார் நவீன். வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் பலரும், ஆற்றில் குப்பையை போடுவதை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

தினமும் ரூ.15 ஆயிரத்துக்கு டீ, மேகி விற்கும் வியாபாரி



ஹிமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ரோதங் கணவாய். சுற்றுலாப் பயணியர் குறைவாக இருக்கும் பருவத்திலும், இங்குள்ள சாலையோரக் கடைக்காரர் ஒருவர் தினமும் 14 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை நடப்பதாக கூறியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. தினமும் 60- முதல் 70 தட்டு மேகி (தட்டுக்கு ரூ.100), 200 கப் டீ (ஒரு கப் ரூ.40) விற்பதாக அவர் தெரிவித்தார்.

முட்டையும் தனியாக விற்கிறார். மேகி விற்பனையால் அவருக்கு 6 முதல் 7 ஆயிரம் ரூபாயும், டீ விற்பனையில் 8 ஆயிரம் ரூபாயும் அவருக்கு தினமும் கிடைக்கிறது. 'எந்தத் தொழிலும் சிறியதல்ல' என்றார் டீ விற்பனையாளரை பேட்டி எடுத்த சவுகான். 'இது வருமானமே தவிர லாபமல்ல; செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்' என்கின்றனர், வலைதளவாசிகள்.

முன்கூட்டியே சென்ற விமானம் பயணி கொந்தளிப்பு



'மும்பை- - டில்லி ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணிப்பதற்காக உரிய நேரத்தில் சென்றும், விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. 'பயணி வரவில்லை' என்று காரணம் கூறி, மெசேஜ் அனுப்பினர்' என்று வருத்தப்பட்டுள்ளார், சர்தக் சவுத்ரி.

அவர் பயணம் செய்ய வேண்டிய விமானம், இரவு 11:20க்கு புறப்படுவதாக இருந்தது. திடீரென 10:20 மணிக்கு புறப்படும் என்று விமான நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அப்படியும், 9 மணிக்கு அவர் விமான நிலையம் சென்று விட்டார். நீண்ட பயணியர் வரிசையை கடந்து அவர் கவுன்ட்டரை அடைந்தபோது, 'நேரம் கடந்து விட்டதாக' கூறி, விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. விமானம் முன்கூட்டியே புறப்படுவதை, உரிய நேரத்தில் தெரிவிக்கவில்லை என்ற அவரது புகார், வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. ஸ்பைஸ்ஜெட்டை வலைதளவாசிகள், கடுமையாக விமர்சிக்கின்றனர்.

டிரம்ப் டவரில் வீட்டுக்காவல்; உரிமையாளர் புகாரால் அதிர்ச்சி



அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயர் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, ஹரியானாவின் குருகிராமில் இருக்கிறது. அதில் குடியேறிய வருண் சுஹாக், கட்டட உரிமையாளரான, 'எம்3எம்' நிறுவனம் தன் குடும்பத்தை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு கூறினார். '36-ம் மாடியில் இருக்கும் என் வீட்டுக்கு பர்னிச்சர் கொண்டுவந்தபோது கட்டுப்பாடுகள் தொடங்கின. லிப்ட் அழைப்புப் பொத்தான் முடக்கப்பட்டது' என்று அவர் கூறினார்.

Latest Tamil News
இங்குள்ள ஒவ்வொரு வீடும் 20 கோடி ரூபாய் விலை மதிப்பு கொண்டவை. புகார் கூறிய வீடியோ வைரல் ஆன நிலையில், வலைதளவாசிகள், கட்டட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், லிப்ட் இயக்கம் தொடங்கியதாக சுஹாக் கூறியுள்ளார். 'பராமரிப்புக் கட்டணம் செலுத்தாமல் இருந்ததே காரணம்' என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

48 ஆண்டாக தண்ணீர் இல்லை வாரன் பபெட் சுவாரஸ்யம்



உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான வாரன் பபெட், 48 ஆண்டுகளாகத் தண்ணீர் குடிக்கவில்லை என்று கூறியது, உலக அள வில் டிரெண்டிங்கில் உள்ளது. சக கோடீஸ்வரர் பில் அக்மேன் விருந்தில் பங்கேற்றார் பபெட்.

Latest Tamil News
சாதாரண தண்ணீர் அல்லது சோடா வழங்கியதை பெற மறுத்த பபெட், 'பில், நான் 48 ஆண்டுகளாகத் தண்ணீர் குடிக்கவில்லை' என்று கூறியுள்ளார். கோகோ கோலா நிறுவனத்தின் செர்ரி கோக்கை விரும்பி குடிப்பதாக தெரிவித்துள்ளார். 2015ல் அளித்த நேர்காணலில், தினமும் குறைந்தது 5 கோகோ- கோலா பானங்களை குடிப்பதாக பபெட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement