ஒரு தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நேற்று மாலை தரிசனம் செய்துவிட்டு, வெளியே பேட்டி அளித்தபோது கோயிலில் ஒரு நிமிடம் மின்தடை ஏற்பட்டது.

பசும்பொன்னில் தேவர் குருபூஜை, காந்திகிராம பல்கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு நேற்று மாலை துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். கவர்னர் அர்லேக்கர் உடனிருந்தார். கோயில் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அறங்காவர் குழுத்தலைவர் ருக்மணியிடம் ராதாகிருஷ்ணன் நலம் விசாரித்தார். அம்மன், சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு, பிரசாதம் வழங்கப்பட்டது.

தமிழர் பிரதமர்





பின்னர் மாலை 6:30 மணிக்கு, கோயிலுக்கு வெளியே சித்திரை வீதியில் பத்திரிகையாளர்களை ராதாகிருஷ்ணன் சந்தித்தார். அவர் கூறியதாவது: ஒரு தமிழர் பிரதமர் ஆவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. ஒரு கன்னடர், குஜராத்தை சேர்ந்தவர் பிரதமராக ஆகும்போது தமிழரும் பிரதமர் ஆகலாம். ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியா வல்லரசு ஆவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வல்லரசு ஆகும் என கூறினால் நம்பிக்கை இருக்காது. ஆனால், இப்போது இந்தியா வல்லரசு ஆகும் என சொன்னால் நம்புவார்கள். அதே நம்பிக்கை தான் உலகின் நான்காவது வல்லரசாக இந்தியாவை உருவாக்கியுள்ளது. நிச்சயம் உலகின் முதல் வல்லரசு நாடாக இந்தியா மாறும். இவ்வாறு கூறினார்.

பேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது கோயிலில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘அமைச்சரிடம் கேளுங்கள்’ என்றார்.

ஜெனரேட்டர் மின்சாரம்





மின்தடை குறித்து அறங்காவர் குழுத் தலைவர் ருக்மணி கூறியதாவது: கோயிலில் துணை ஜனாதிபதி வந்திருந்த போது ஜெனரேட்டர் மூலம் தான் மின் விநியோகம் செய்யப்பட்டது. நாட்டில் எவ்வளவு மின்தடை இருக்கிறது என்பதை கடவுள் காண்பிக்கிறார். மின்தடை நிவர்த்தியாக வேண்டும் என நாம் மீனாட்சியிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். மின்வெட்டு தான் இந்த நிலைக்கு காரணம். இவ்வாறு கூறினார்.

கோயில் தரப்பில் கேட்டபோது, ‘கோயில் மின்கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட திடீர் கோளாறே மின்தடைக்கு காரணம்’ என்றனர்.

அமைச்சர் கூறுவதென்ன





அமைச்சர் நிர்மல்குமார் தெரிவிக்கையில் ‘‘துணை ஜனாதிபதி மாலை 5:35 மணிக்கு கோயிலுக்கு வந்து, 6:25 மணிக்கு புறப்பட்டார். மதியம் 3:30 மணி முதல் கோயில் முழுவதும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. மின் உதவிப் பொறியாளர் கோயில் மின் நிலையத்தில் இருந்தார்.

தரிசனத்திற்குப் பிறகு, துணை ஜனாதிபதி பத்திரிகையாளர்களை சந்தித்த போது, கோளாறு காரணமாக கோயிலுக்குள் மின் விநியோகம் தடைபட்டது. 2 நிமிடங்களில் மின்சாரம் ஜெனரேட்டரிலிருந்து மின்சார வாரியத்திற்கு மாற்றப்பட்டது என்றார்.

Advertisement