மதுரை -கள்ளழகர் கோயிலுக்கு ஜீயர் நியமனம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை கள்ளழகர் கோயிலுக்கு புது ஜீயரை தேர்வு செய்து நியமிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருமுள்ளைவாயில் சத்தியநாராயணன், ‘‘மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் காலியாக உள்ள 'ஜீயர்' பதவியை நிரப்ப அறநிலையத்துறை செயலர், கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்,’’ என பொதுநல மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

மதுரை கள்ளழகர் கோயிலுடன் பாரம்பரியமாக தொடர்புடைய 'ஜீயர்' பதவி, 80 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டுகிறார். கோயில் தரப்பு வழக்கறிஞர் இம்மனுவிலுள்ள கோரிக்கையை ஆட்சேபித்தார். இதே போன்றதொரு விவகாரத்தில் சாதகமான நிலைப்பாட்டை எடுத்திருந்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் (ஏ.ஏ.ஜி.,) இம்முறை அத்தகைய சாதகமான அணுகுமுறையை தெரிவிக்கவில்லை.

கள்ளழகர் கோயிலுக்கு 'ஜீயர்' பதவி ஏதேனும் உள்ளதா என அக்கோயில் தரப்பு வழக்கறிஞர், ஏ.ஏ.ஜி.,யிடம் கேள்வியை எழுப்பினோம். அவர்கள் அக்கோயிலுக்கு ஜீயர்கள் இருந்ததை ஒப்புக்கொண்டனர். இறுதியாக இருந்த ஜீயர் 1940 ல் அப்பீடத்தை துறந்துள்ளார். பின் அப்பதவி காலியாகவே உள்ளது.

* மரபு நிலைநாட்டல்:

கள்ளழகர் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இது வைணவ தென்கலை பிரிவை சேர்ந்தது. ஜீயர் பதவி காலியாக உள்ளது என்பதற்காக மட்டும், இம்மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமா என கேள்வி எழுந்தது. உச்சநீதிமன்றம்,‛அனைத்து நிகழ்வுகளிலும் வழக்கமான மரபுகளே மேலோங்கி இருக்க வேண்டும். ஏதேனும் மரபு மீறல்கள் அல்லது பிறழ்வுகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை சரிசெய்து மீண்டும் அம்மரபுகளை நிலைநாட்ட வேண்டும்,’ என தீர்ப்பளித்துள்ளது. இழந்த ஒன்றை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதே இதன் பொருள். நீர்நிலைகளை பொறுத்தவரையில் பயன்பாடின்றிபோன குளங்களை மீண்டும் சீரமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதே கொள்கையை இவ்வழக்கிற்கும் பொருத்தி பார்க்கிறோம். 80 ஆண்டுகளாக இக்கோயிலில் ஜீயர் இல்லையென்றாலும், அம்மரபை மீண்டும் மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது. இறுதியாக இருந்த ஜீயர் 1937 ல் நியமிக்கப்பட்டார். அவர் 1946 ல் எவ்வித தகவலும் இன்றி பொது வெளியிலிருந்து மறைந்துவிட்டதாக தெரிகிறது. அக்காலகட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை காரணமாகக்கூறி தற்போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வாதிட முடியாது.*மந்திரவாதியின் தொப்பியிலிருந்து:

பல நுாற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த மரபின்படி, கள்ளழகர் கோயிலை நிர்வகிப்பதில் 'ஜீயர்' உயர்ந்த ஆன்மிக மற்றும் நிர்வாக அதிகாரத்தை கொண்டிருந்தார். 1959 தமிழ்நாடு ஹிந்து அறநிலையத்துறை சட்டம் என்பது ஏதோ மந்திரவாதியின் தொப்பியிலிருந்து திடீரென உருவான புது சட்டம் அல்ல. அதற்கு முன்பாக 1951 ல் சட்டம் நடைமுறையில் இருந்தது; அதற்கு முன் 1927 ல் சட்டம் இருந்தது. அதற்கும் முன்பே இத்துறையை முறைப்படுத்தும் விதிகள் இருந்தன. மத நிறுவனங்களின் மீது அரசுக்கு மேற்பார்வை அதிகாரம் இருந்தது.*நகைச்சுவை விமர்சனம்:

நகைச்சுவை கலந்த விமர்சனம் ஒன்றை சொல்ல வேண்டுமானால், ஹிந்து மத நிறுவனங்களின் விஷயத்தில் மட்டுமே சாட்டையை சுழற்றுவதற்கான துணிச்சலை அரசு வெளிப்படுத்தியுள்ளது.

மடங்களும் மத நிறுவனங்களே. 1959 சட்டம் 'மடம்' என்பதற்கான வரையறை அளித்துள்ளது. மடங்களுக்கென தனி அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது. மடத்தின் தலைவரான 'மடாதிபதி' பதவி காலியாகும்போது, தற்காலிக ஏற்பாடுகளை செய்ய வேண்டிய பொறுப்பை சம்பந்தப்பட்ட அதிகாரி மேற்கொள்ள வேண்டும் என சட்டத்தின் ஒரு பிரிவு கட்டாயமாக்குகிறது.

*வேறுபாடு:

ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் நியமனம் குறித்து நாங்கள் விரிவாக ஆராய்ந்துள்ளோம். அதே சட்ட கொள்கை கள்ளழகர் கோயிலின் ஜீயர் நியமனத்திற்கும் (தேவையான மாற்றங்களுடன்) பொருந்தும். இருப்பினும் இதில் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாராயண ஜீயர் மடத்தை பொறுத்தவரை, பதவியில் இருந்தவர் தனது வாரிசை நியமிக்காமல் மறைந்து விட்டால், 'ஸ்தலத்தார்'கள் புது வாரிசை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது நீண்டகாலமாக பின்பற்றப்படும் நடைமுறை.

கள்ளழகர் கோயிலில் 'ஸ்தலத்தார்'கள் என்ற அமைப்பு இல்லையென்றாலும், இதற்காக செய்வதறியாது கைவிரித்து நிற்க வேண்டிய அசியமில்லை. ஒரு வழக்கில் இதற்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. ‛இதுபோன்ற சூழ்நிலைகளில் அதே மரபு அல்லது தொடர்புடைய பிற மடங்களின் தலைவர்களிடம் புதிய வாரிசை நியமிக்கும் அதிகாரத்தை ஒப்படைக்கலாம்,’என அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மடத்திற்கு 80 ஆண்டுளகாக ஜீயர் இல்லாததால் அதன் சீடர்கள், பக்தர்களை கண்டறிவது இருளில் தடுமாறி தேடுவதற்கு ஒப்பானதாக இருக்கும். அத்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி, அரசுக்கு மாற்றாக நீதிமன்றமே இதில் தலையிட்டு முடிவெடுக்க வேண்டியுள்ளது.

*உச்சபட்ச அதிகாரம்:

ஜீயர் கடவுளின் முதன்மையான தொண்டராகவும், தனிப்பட்ட கைங்கரியக்காரராகவும் விளங்குகிறார். கோயிலின் மத மற்றும் நிர்வாகம் தொடர்பான வழிகாட்டும் ஆவணங்களாக விளங்கும் ‛தொழில் அட்டவணை’, ‛சுதந்திர அட்டவணை’ மூலம் நிர்வாகத்தில் ஜீயர் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக திகழ்கிறார் என்பது தெளிவாகிறது. அவர் கோயில் நிர்வாகத்தின் உச்சபட்ச அதிகாரம் படைத்தவராவார். கோயிலின் சாவிகள் அவரது பொறுப்பில் இருக்கும். அர்ச்சகர்கள் உள்ளிட்ட இதர பணியாளர்கள் அவருக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர்கள். ஜீயர் கோயில் வளாகத்திலேயே தங்க வைக்கப்பட வேண்டும். அவருடைய பராமரிப்பு செலவுகளை கோயில் நிதியிலிருந்தே மேற்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய மத நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களால் அடுத்த வாரிசை தேர்ந்தெடுக்க முடியும் என்பதால், கள்ளழகர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ ராமானுஜ ஜீயர் மடத்தின் அடுத்த ஜீயரை தேர்ந்தெடுக்கும் பணியை திருக்குறுங்குடி ஜீயர், ஆழ்வார்திருநகரி ஜீயர் மற்றும் பெரிய நம்பிகள் சுவாமி ஆகியோர் மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.மதிப்பிற்குரிய அப்பெரியோர்களிடம் இக்கடினமான, முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதால், இப்பணியை நிறைவேற்றுவதற்கு காலக்கெடுவை நிர்ணயிப்பதை தவிர்க்கிறோம். அவர்கள் நேரில் அல்லது காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி, அடுத்த ஜீயரை தேர்வு செய்ய வேண்டும். இது விரைந்து முடிக்கப்பட்டு, கள்ளழகர் கோயிலுக்கு ஒரு சிறந்த ஜீயர் கிடைப்பார் என நம்புகிறோம். ஜீயர் தேர்வு செய்யப்பட்டவுடன், அதை அங்கீகரித்து அறநிலையத்துறை உத்தரவு பிறப்பிக்கும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement