போர், ஆயுத ஏற்றுமதிக்கு எதிர்ப்பு 22 நாடுகளில் வேலை நிறுத்தம்

ரோம்: உலக அமைதியை வலியுறுத்தியும், போருக்கான ஆயுதங்கள் கடல் வழியாக ஏற்றிச் செல்வதை எதிர்த்தும், நம் நாடு உட்பட, 22 நாடுகளில் உள்ள, 110-க்கும் மேற்பட்ட துறைமுகங்களில் தொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஈரான் – அமெரிக்கா போர், இஸ்ரேல் – காசா போர், உக்ரைன் – ரஷ்யா போர் என, சில மாதங்களாக உலகளவில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கு தேவையான ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் ராணுவ தளவாடங்கள் பெரும்பாலும் கடல் மார்க்கமாகவே அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த 2021 – 25 காலத்தில், உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக ஐரோப்பா மாறியது. தொடர்ந்து, கடந்த மே மாதம், 35க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளின் தொழிற்சங்கங்கள், ‘துறைமுகங்களை ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் ராணுவ தளவாடங்களை ஏற்றி செல்ல பயன்படுத்தக் கூடாது; துறைமுக தொழிலாளர்கள் போருக்காக வேலை செய்ய மாட்டார்கள்’ என, தெரிவித்தன.

இதன் ஒரு பகுதியாக, ‘துறைமுகங்கள் போருக்கானவை அல்ல’ என்ற முழக்கத்தின் கீழ், நம் நாடு, பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், துருக்கி, மொராக்கோ உள்ளிட்ட 22 நாடுகளின், 113 துறைமுகங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், மத்திய தரைக்கடல் பகுதியில், 40 சதவீத சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நம் நாட்டில் தமிழத்தின் துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகம், மும்பை, கொச்சி உள்ளிட்ட முக்கிய துறைமுகங்களில், 5,000-க்கும் மேற்பட்ட துறைமுக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Advertisement