அமெரிக்கா தாக்கினால் உடனடி பதிலடி ஈரான் ராணுவத்துக்கு உச்ச தலைவர் உத்தரவு

டெஹ்ரான்: அமெரிக்காவின் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் உடனடியாகவும், வலுவாகவும், எல்லைகளை கடந்தும் பதிலடி கொடுக்க தயாராக இருக்கும்படி ஈரான் ராணுவத்துக்கு அந்நாட்டு உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உத்தரவிட்டுள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரித்து அதை அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் எதிராக பயன்படுத்தும் என்ற அச்சுறுத்தல் காரணமாக அந்நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ல் தாக்குதலை தொடங்கின.

இந்த தாக்குதலில் அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மார்ச் 8ல் அயதுல்லாவின் மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையே, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாத அமைப்புக்கும், சவுதி அரசு படைகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர கத்தார் அதிகாரிகள் மத்தியஸ்த முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால், அணுசக்தி பேச்சை முதலில் தொடங்குவதா அல்லது ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகையை நீக்குவதா என்பதில் இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடு நீடிக்கிறது. இந்நிலையில், ஈரானின் அதிகாரப்பூர்வ, சமூகஊடக கணக்கில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ராணுவத்துக்கு மொஜ்தபா கமேனி சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

மொஜ்தபா கமேனி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

அமெரிக்கா மீண்டும் ராணுவ அல்லது பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டால், உடனடியாகவும் வலுவாகவும் பதிலடி கொடுக்க வேண்டும். அந்த பதிலடி புவியியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். மோதலை எப்போது முடிவுக்கு கொண்டுவருவது, அதற்கான நிபந்தனைகள் என்ன என்பதை ஈரானே தீர்மானிக்கும்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அனைத்து வகையான சொத்துகளையும் தாக்குதல் இலக்குகளாக கொண்டு, இலக்கு பட்டியலைப் புதுப்பிக்க வேண்டும். வெடிமருந்துகள், ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ராணுவ உளவுத்துறையை வலுப்படுத்துவதுடன், உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களையும் மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement