குறைந்து வரும் நேருக்கு நேர் மறைந்து வரும் உறவுகள் இழந்து பெறுவது என்ன?

ஒருவரிடம் பேசுவதற்கு ஆயிரம் வார்த்தைகள் இருக்கலாம். ஆனால், நம்முடைய வார்த்தைகளை காது கொடுத்து கேட்க எவரும் இல்லாதபோது, ஆயிரம் வார்த்தைகளும் மனதிற்குள் மரித்து போகின்றன.

இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதர்களின் வாழ்க்கை உறவுகளாலும் உரையாடல்களாலும் நிறைந்திருந்தது. தேநீருடன் தொடங்கும் பேச்சு, மாலை நேரத்து வாசல் உரையாடல், திண்ணையில் அமர்ந்து அரட்டை அடிக்கும் அண்டை வீட்டினர், தாத்தா பாட்டிகளின் வாழ்க்கைக் கதைகள் என அன்றாட வாழ்வின் எளிய தருணங்களில் மகிழ்ச்சியும் நெருக்கமும் நிறைந்திருந்தன. உரையாடல்கள் மனதிற்கு ஆறுதலையும், நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் அளித்தன.

ஆனால், இன்று மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசுவதற்கான தருணங்கள் குறைந்து விட்டன. இது வெறும் வாழ்க்கைமுறை மாற்றமா? அல்லது மனித உறவுகளின் அடிப்படையை புரட்டி போட்டுக்கொண்டிருக்கும் சமூக பிரச்சினையா?

முகபாவங்கள், கண்கள், குரலின் மாற்றங்கள் ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்துபவை. நேருக்கு நேர் பேசும்போது இவற்றை உணர முடியும். ஆனால், இன்று செல்போனில் பேசுகிறோம். அல்லது செல்போனை பார்த்தபடி எதிரில் உள்ளவரோடு பேசுகிறோம். பேச்சில் கவனமும், எதிரில் இருப்பவருக்கு மரியாதையும் சிதறுகின்றன.

குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது குறைந்து விட்டது. ‘படித்தாயா, சாப்பிட்டாயா, ஏன் சோகமாக இருக்கிறாய்?’ என்று அக்கறையுடன் கேட்கும் தருணங்கள் குறைகின்றன. இதனால் அவர்கள் தங்கள் உணர்வுகளை பெற்றோரிடம் வெளிப்படுத்தாமல் தனக்கென செல்போனில் தனி உலகை உருவாக்குகின்றனர்.

முதியவர்களும் தனிமைக்கு தள்ளப்படுகின்றனர். பணம், பொருள், மருத்துவ உதவி ஆகியவை மட்டுமே அவர்களுக்குப் போதுமானவை அல்ல. துணையை இழந்த துயரம், பிள்ளைகள் வேறு ஊர்களில் வாழும் சூழல், தங்களது அனுபவங்களைக் கேட்க யாரும் இல்லாத நிலை ஆகியவை தனிமையை அதிகரிக்கின்றன.

சிரிக்கிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு மனதில் வலி இல்லை என்று அர்த்தமல்ல. துயரத்தை பகிர்ந்தால் பலவீனமாகி விடுவோமோ என்ற பயத்தால் மனதிற்குள் வலிகளை சுமக்கின்றனர்.

சுற்றிலும் உறவுகள் இருந்தாலும், உண்மையான நெருக்கம் இருக்கிறதா என்பது கேள்விதான். எதிர்பார்ப்பு இல்லாமல் பழகுவதும், கஷ்டத்தில் உடனிருப்பதுமே உறவுகளுக்கு உயிரூட்டும்.

ஒருவர் நம்பிக்கையுடன் பகிரும் விஷயங்களை பிறரிடம் கூறாமல் இருப்பதும், அவற்றை அவருக்கே எதிராக பயன்படுத்தாமல் இருப்பதும் ஆரோக்கியமான உறவுகளின் அடிப்படையாகும்.

அதேபோல், மாறுபட்ட கருத்துகளை கேட்பதற்கான பொறுமையும் அவசியம். பரஸ்பரம் புரிந்துகொள்வதற்கு பதிலாக, யார் பெரியவர் என்பதை நிரூபிப்பதற்கான போட்டியாக உரையாடல் மாறும்போது உறவுகளில் விரிசல் ஏற்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தொலைவில் இருப்பவர்களுடனும் எளிதாக பேச முடிகிறது. ஆனால், ஒரே வீட்டில் வசிப்பவர்கள்கூட தனித்தனியாக மொபைலில் மூழ்கி கிடப்பது அதிகரித்துள்ளது.

பி.எஸ்.ஜி. கல்லூரி உளவியல் பேராசிரியர் பாலகிருஷ்ணமூர்த்தி கூறுகிறார், “அருகில் இருப்பவர்களுடன் பேச நேரமில்லாத நிலையில், தொலைவில் இருப்பவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். தொழில்நுட்பம் நேருக்கு நேர் பேசும் பழக்கத்தை மாற்றியுள்ளது” என்று.

பேபி பூமர்கள், எக்ஸ் தலைமுறையினர், மில்லேனியல்கள், ஜென் ஜி என ஒவ்வொரு தலைமுறையிலும் பெரிய தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டு, சிந்தனை, வாழ்க்கைமுறை, எதிர்பார்ப்பு ஆகியவற்றில் பெரிய வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன.

மூத்தவர்களின் அனுபவங்களை இளைஞர்களும், இளைஞர்களின் சிந்தனைகளை மூத்தவர்களும் மதிக்க கற்றுக் கொண்டால் தலைமுறை இடைவெளி குறையும்.

உறவுகள், உரையாடல்கள் பற்றி திருவள்ளுவர் அழகாக சொல்லி இருக்கிறார். ‘அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளா கோடின்றி நீர்நிறைந் தற்று’ என்கிறார். சுற்றத்தாருடன் கலந்து பழகாதவரின் வாழ்க்கை, கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்திருப்பதை போன்றது என்பது பொருள். நீர் நிறைந்திருந்தாலும் பயனற்ற குளத்தை போல, உறவுகளுடன் உரையாடி பழகாத வாழ்க்கையும் பயனற்றது.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூதாட்டி தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

“திருமணமாகி, குழந்தை பிறந்த சில ஆண்டுகளில் கணவர் இறந்துவிட்டார். வேலைக்கு சென்றேன். குழந்தையை தனியாக வளர்ப்பது சிரமமாக இருந்ததால் விடுதியில் சேர்த்தேன். தேவைகளை பூர்த்தி செய்தேன். திருமணமும் செய்து வைத்தேன். ஆனால், இன்று என்னை பார்த்துக்கொள்வது சிரமம் என்று முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டாள். மகளை வளர்த்து ஆளாக்க கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தேன்; ஆனால், மகளுடைய பாசத்தை சம்பாதிக்க தவறி விட்டேன். அதனால் வாழ்க்கையில் தோற்று விட்டேன்” என்று கண் கலங்குகிறார்.

உறவுகள் முக்கியம். குடும்ப உறவும் சரி, நட்பு உறவும் சரி. அதை பாதுகாக்கும் வழி உரையாடல்.

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கி குழந்தைகள், பெரியவர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் நேரில் பேச ஆரம்பித்தால் மாற்றத்தை தொடங்கலாம்.

மதுஸ்ரீ

Advertisement