தவறை மறைக்க ஆளும்கட்சி மீது பழிபோடும் தி.மு.க., கைத்தறி துறை அமைச்சர் சாடல்

ஈரோடு: ‘‘செய்த தவறை மறைக்க, ஆளும்கட்சி பழி வாங்குவதாக, தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர்,’’ என, கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.

ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் உலக போலியோ தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ – மாணவியருக்கு இடையேயான கைப்பந்து போட்டியை, கைத்தறி, துணிநுால் மற்றும் கதர்துறை அமைச்சர் விஜய்பாலாஜி தொடங்கி வைத்து, மாணவியருடன் கைப்பந்து விளையாடினார்.

அதன்பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

வரும், 3ல் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடக்க உள்ள அரசு நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் விஜய், 12 மாவட்டங்களை சேர்ந்த, 4,000 மகளிர் குழுவினருக்கு, 1,100 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

த.வெ.க., அரசு மீது தி.மு.க.,வினரால் ஊழல் குற்றச்சாட்டுகளை கூற முடியவில்லை. எனவே, தாங்கள் இருப்பதை காட்டி கொள்ள வேண்டும் என்பதற்காக, இல்லாத ஒரு பிரச்னைக்காக, தி.மு.க.,வினர் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

கடந்த காலங்களில் இருந்தது போன்று மின்வெட்டு தற்போது இல்லை. அவ்வப்போது டெக்னிக்கல் தவறுகளால் மின்வெட்டு ஏற்படுகிறது. இதை பெரிதாக்கும் வகையில் எதிர்கட்சியினர் பேசுகின்றனர்.

கடந்த ஆட்சியாளர்கள், அரசு கஜானாவை காலி செய்து சென்று விட்டனர். மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடன் வாங்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னாள் அமைச்சர் மகேஷ், செய்த தவறுக்கு ஆதாரம் இருப்பதால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தவறு இல்லை எனில், எதற்காக முன் ஜாமின் வாங்க முயற்சிக்க வேண்டும். செய்த தவறை மறைக்க, ஆளும்கட்சி பழி வாங்குவதாக கூறுகின்றனர்.

தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டனை அனுபவிப்பர். அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் சீமான் பொது வேட்பாளராக போட்டியிடும் பட்சத்தில், த.வெ.க.,விற்கு நெருக்கடி இல்லை. வரும் காலங்களில் எந்த தொகுதியில் இடைதேர்தல் நடந்தாலும் த.வெ.க., வெற்றி பெறும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement