இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனைத் தொடக்க விழா

திண்டிவனம்: திண்டிவனம் உழவர் சந்தையில் இயற்கை வேளாண் விளை பொருட்கள் விற்பனைத் தொடக்க விழா நடந்தது.

திண்டிவனம் உழவர் சந்தைக்கு தினசரி 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாளொன்றுக்கு சராசரியாக 16 ஆயிரம் கிலோ காய்கறிகள், கீரைகள்,பழங்கள், பூக்கள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

இயற்கை வேளாண் விளை பொருளுக்கான உரிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரவும் மற்றும் பொதுமக்களுக்கு இயற்கை மற்றும் அங்கக உணவுப் பொருட்களான சிறுதானிய அரிசி வகைகள், கீரைகள், பழங்கள், காய்கறிகள், சிறுதானிய தின்பண்டங்கள், கஞ்சி வகைகள், மூலிகை சூப் வகைகள், முளைகட்டிய பருப்பு வகைகள், சத்து மாவுகள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், பிரண்டை, முடக்கத்தான், துாதுவளை, நாட்டுக்கோழி முட்டை, காடை முட்டை எளிதில் கிடைக்கும் வகையில் திண்டிவனம் உழவர் சந்தையில் இயற்கை வேளாண் விளைபொருட்கள் விற்பனை தொடக்க விழா நேற்று நடந்தது.

வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் செயல்படும் இயற்கை வேளாண் விளைப் பொருள்களுக்கான வார சந்தையினை வேளாண் உதவி இயக்குநர் கோமதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில், வேளாண் அலுவலர் சரண்ராஜ், கார்த்திகா, உழவர் சந்தை நிர்வாக அதிகாரி கருப்பையா உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் 12 அங்கக விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Advertisement