செல்ல பிராணிகள் ஞாயிறு சந்தைக்கு தடை எதிர்ப்பு தெரிவித்து பிராட்வேயில் போராட்டம்
பிராட்வே: பிராட்வேயில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த செல்லப்பிராணிகள் ஞாயிறு சந்தைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அக்., 29ல் தடை விதித்தது. இதையடுத்து, தடையை மீறி இன்று (நவ.,1) சந்தை நடத்த முயன்ற வியாபாரிகளை, மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிராட்வே, அம்மன் கோவில் தெருவில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இச்சந்தையில், சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் கிளி, புறா, நாய், பூனை, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை விற்பனை செய்து வந்தனர்.
இதனால், அப்பகுதியில் வசிக்கும் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் போக்குவரத்து நெரிசல், சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வந்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், அனுமதியின்றி நடைபெறும் சந்தைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, மாநகராட்சி சார்பில் தடை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் கடைகள் அமைக்க வந்த வியாபாரிகளை, போலீசார் இரும்புத் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், மேல்முறையீடு செய்யலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சிலர் கைகளில் வைத்திருந்த செல்லப்பிராணிகளை விற்பனை செய்துவிட்டு சென்றனர். பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மேலும்
-
அரசு வீடுகளில் தனியாரை வெளியேற்ற நோட்டீஸ்! உள்வாடகை மோசடிக்கு முடிவுகட்ட வேட்டை
-
பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன்
-
ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு; ரயில்கள் ரத்து
-
எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் வேட்புமனு நிராகரிப்பு; போட்டியின்றி எம்பியாகிறார் ஹர்தீப் சிங் புரி
-
டிரைவருக்கு வலிப்புவிபத்தில் சிக்கிய கார்
-
பனை விதைகள் நடவு