பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன்

2

​ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

​வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாத திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

​இதன் தொடர்ச்சியாக, முக்கிய விழாவான பூவோடு எடுக்கும் உற்சவம் நேற்று காலை, தொடங்கியது. கோவில் தலைமை பூசாரி, கையில் அக்னி பூச்சட்டியை ஏந்தியபடி பிரகாரத்தை வலம் வந்தார்.

​அப்போது கோவிலில் திரண்டிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன், தாங்கள் கொண்டு வந்த காணிக்கையான நாணயங்களை பூச்சட்டிக்குள் போட்டனர்.

​இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள், பூசாரியிடம் சாட்டையடி வாங்கும் நேர்த்திக்கடன் நடந்தது. கையில் நீண்ட சாட்டையை வைத்திருந்த கோவில் பூசாரி, வரிசையில் காத்திருந்த பக்தர்களின் கைகளிலும், உடலிலும் சாட்டையால் ஓங்கி அடித்தார். பக்தர்கள் உடலை வருத்தி வாங்கும் இந்த சாட்டையடி மூலம், பேய், பிசாசு போன்ற தீய சக்திகள் அகலும் என்றும், நீண்ட நாள் நோய்கள் மற்றும் தீராத பிணிகள் நீங்கும் என்றும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

​பெண்கள், ஆண்கள், கைக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, நீண்ட வரிசையில் காத்திருந்து பூசாரியிடம் சாட்டையடி வாங்கினர். பின்னர், பக்தர்கள் அம்மனை தரிசித்து, வழிபாடுகளை நிறைவு செய்தனர்.

Advertisement