​அரசு வீடுகளில் தனியாரை வெளியேற்ற நோட்டீஸ்! ​உள்வாடகை மோசடிக்கு முடிவுகட்ட வேட்டை

​கோவை: வாடகை வீடு ஒதுக்கீடு பெற்ற அரசு ஊழியர்கள், அதை இரு மடங்கு உள் வாடகைக்கு விடும் மோசடிக்கு முடிவு கட்ட தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

​எதிர்பாராத நேரங்களில் திடீர் சோதனை நடத்தி, அத்தகைய ஊழியர்களை கண்டுபிடிக்க வீட்டு வசதி வாரியம் உத்தரவிட்டுள்ளது. கோவை - மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு பன்னடுக்கு மாடி குடியிருப்பில் அதிகாலை 6 மணிக்கு சோதனை நடந்தது.

​அந்த காலனியில் ஏ, பி1, பி2, சி1, சி2, சி3, சி4, டி என 8 பிளாக்குகளில் 1848 வீடுகள் உள்ளன. வாரியத்தின் விதிகளுக்கு முரணாக பல ஊழியர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை வேறு நபர்களுக்கு உள்வாடகைக்கு விட்டிருப்பதாக புகார்கள் வந்தன.

​அதை தொடர்ந்து, சனிக்கிழமை காலை 6 மணிக்கு அந்த குடியிருப்புக்கு வரிசையாக பல ஜீப்புகள் வந்தன. அவற்றில் வந்த வீட்டு வசதி துறை இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகள் சி2 பிளாக்கை முற்றுகையிட்டு, வீடு வீடாக சோதனை செய்தனர்.

​வீட்டில் இருந்தவர்களிடம், "நீங்கள் தான் ஒதுக்கீட்டுதாரரா? ஆதார் கார்டு காட்டுங்கள்; வாடகை செலுத்திய ரசீதுகளை கொடுங்கள்" என்று கேட்டு கிடுக்கிப்பிடி போட்டனர். உண்மையான ஒதுக்கீட்டாளர்கள், அவர்கள் கேட்ட ஆவணங்களை காட்டினர். உள்வாடகைக்கு குடி இருந்தவர்களால், அந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

​"ஒதுக்கீட்டுதாரரின் சொந்தம் தான் நாங்கள்; வெளியூரில் இருந்து வந்திருக்கிறோம்; அவர் வெளியே போயிருக்கிறார்" என்பது போன்ற பதில்களை சொல்லி சமாளிக்க முயன்றனர். அதிகாரிகள் அங்கு இருந்த செக்யூரிட்டி ஊழியர்களை வரவழைத்து கறாராக விசாரித்தபோது, வெளிநபர்கள் உள்வாடகைக்கு இருப்பது உறுதியானது. சி2 பிளாக்கில் மட்டும் 12 வீடுகளை ஒதுக்கீட்டுதாரர் உள்வாடகைக்கு விட்டிருப்பது தெரியவந்தது.

​அவர்களை வெளியேற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி உள்வாடகைக்கு விட்ட அரசு ஊழியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அங்கேயே ஏற்பாடு செய்தனர். பதில் கிடைத்த பின், அதில் திருப்தி இல்லை என கூறி, அவர்களின் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என ஒரு அதிகாரி தெரிவித்தார்.

​இதற்குள் காலனி முழுதும் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற பிளாக்குகளில் பலர் வீட்டை பூட்டி விட்டு வேகமாக வெளியேறியதை பார்க்க முடிந்தது. கார்களும் டூவீலர்களும் வேகமாக கிளம்பி சென்றன. எனவே உள்வாடகை விவகாரத்தில் சி2 பிளாக் மட்டும் சம்பந்தப்படவில்லை என்பது தெளிவானது. எனினும், பதற்றமான சூழ்நிலையில், வேறு பிளாக்குகளுக்கு போகாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

​காலனியில் உள்ள செயற்பொறியாளர் வெங்கடேசனிடம் நமது நிருபர் கேட்டபோது, "உள்வாடகைக்கு விட்ட ஒதுக்கீட்டுதாரருக்கும், அவர் வேலை செய்யும் துறையின் தலைவருக்கும், கலெக்டருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

​இரு மடங்கு உள் வாடகை



​ஊழியர் சம்பள அடிப்படையில் அரசு வீட்டு வாடகை நிர்ணயம் செய்கிறது. 'ஏ' டைப் வீடுகளுக்கு குறைந்த பட்சம் ரூ. 6,850, 'பி' ரூ. 6, 250, 'சி' ரூ.3,400, 'டி' ரூ. 2,000 என வாடகை பிடித்தம் செய்கிறது. உள்வாடகைக்கு விடுபவர்கள் அதிகபட்சம் ரூ.15,000, குறைந்தபட்சம் ரூ.6,000 வசூலிக்கின்றனர். அதற்கு 10 மாத வாடகையை அட்வான்ஸ் என பெறுகின்றனர்.

​கோவையில் மட்டுமின்றி தமிழகம் பூராவும் இது நடக்கிறது. வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு தெரியாத ரகசியம் அல்ல. பலருக்கும் பங்கு போவதால் யாரும் கண்டுகொள்ளவில்லை. தவெக அரசு இந்த விஷயத்தில் தீவிரம் காட்டும் என்று ஒதுக்கீட்டாளர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement