நேதாஜி சுபாஷ் சாலையை அகலப்படுத்த அரசு முடிவு

புதுடில்லி: “தலைநகர் டில்லியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மூன்று கி.மீ.,க்கும் அதிகமான நீளம் கொண்ட நேதாஜி சுபாஷ் சாலை அகலப்படுத்தப்படும்,” என, முதல்வர் ரேகா குப்தா கூறினார்.

டில்லி முதல்வர் ரேகா குப்தா, நிருபர்களிடம் இன்று (நவ.,1) கூறியதாவது:

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க டில்லி கேட் முதல் காஷ்மீரி கேட் வரை 3.3 கி.மீ., தூரமுள்ள நேதாஜி சுபாஷ் சாலை அகலப்படுத்தப்படும். இந்தச் சாலையை ஒழுங்கமைக்கப்பட்ட, அழகான மற்றும் பாதுகாப்பான பாதையாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். இந்தப் பணியை, இந்திரபிரஸ்தா விராசத் புனர்விகாஸ் நிகாம் அமைப்பு செய்யும்.

இந்தச் சாலையை வெறும் போக்குவரத்துக்காக மட்டும் பயன்படுத்தாமல், டில்லியின் வரலாறு, பாரம்பரியம், கட்டடக்கலை, கலாசாரம் மற்றும் நவீன நகர்ப்புற வாழ்க்கை ஆகியவற்றை இணைக்கும் பாலமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். இந்தத் திட்டத்தில், டில்லி கேட் பகுதியில் பாரம்பரிய பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவில் சிலை, அழகான மண்டபம், புல்வெளி, நடைப்பயிற்சி பாதை மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும். அலங்கார செடிகள், மரங்கள் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கட்டடக்கலைக்கு இந்தப் பூங்காவில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

சாலையை அழகுபடுத்தும் இந்த திட்டம் மூன்று பிரிவுகளாக நிறைவேற்றப்படும். காஷ்மீரி கேட் முதல் ஜி.பி.ஓ., சவுக் வரை முதற்கட்ட பணிகள் செய்யப்படும். அது நிறைவடைந்தவுடன் இரண்டாம் கட்டமாக, ஜி.பி.ஓ., சவுக் முதல் பிரிஜ்மோகன் சவுக் வரை பணிகள் தொடங்கப்படும். மூன்றாவது கட்டத்தில், பிரிஜ் மோகன் சவுக் முதல் டில்லி கேட் சந்திப்பு வரை பணிகள் செய்யப்படும்.

நடைபாதை, பஸ்சுக்கான பிரத்யேக தடம், இதர வாகனங்களுக்கான தடம், சாலையோர வாகன நிறுத்துமிடங்கள், பாதசாரிகளுக்கான பொது இடங்கள் மற்றும் சைக்கிளுக்கான பிரத்யேக தடம் ஆகியவை அமைக்கப்படும். சாலையின் இருபுறமும் நவீன பொதுக் கழிப்பறைகள் கட்டப்படும். அதேபோல், தற்போதுள்ள பஸ் – ஸ்டாப்களும் மேம்படுத்தப்படும். அக்ரசென் பூங்கா, லோதியன் கல்லறை, பழைய ரயில் நிலைய சவுக், செங்கோட்டை புல்வெளி பகுதி, செங்கோட்டை தசரா மேளா மைதானம், சாந்தினி சவுக்-, செங்கோட்டை சவுக், சுனேரி மஸ்ஜித் பாக், சுபாஷ் பூங்கா, பிரிஜ் மோகன் சவுக், டில்லி கேட் சவுக், ஏக்தா ஸ்தல் மற்றும் ஹிந்தி பூங்கா ஆகிய 12 முக்கிய இடங்களையும் இந்தச் சாலை இணைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement