மானியத்தில் வீட்டு தோட்டம் இல்லத்தரசிகளுக்கு அழைப்பு

சேலம்: ஐம்பது சதவீத மானியத்தில் வீட்டு தோட்டம் அமைக்க, இல்லத்தரசிகளுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கலெக்டர் இளம் பகவத் அறிக்கை: தமிழக அரசு தோட்டக்கலைத்துறை சார்பில், 'வெற்றி' இல்லத்தரசி வீட்டு தோட்டம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயனாளிகளுக்கு மாடித்தோட்ட தளைகள், நிழல் வலை குடில், காய்கறி மற்றும் பழங்கள் விதை தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. ஒரு பயனாளிக்கு செடி வளர்ப்பு பை, தென்னை நார் கழிவு கட்டி, விதை பொட்டலங்கள் தலா, 6, மண்புழு உரம், மாடித்தோட்ட காய்கறி வளர்ப்பு முறை குறித்த கையேடு, வேப்ப எண்ணெய், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைகோடெர்மாவிரிடி அடங்கிய தொகுப்பு, 50 சதவீத மானியத்தில், 725 ரூபாய்க்கு வழங்கப்படும்.
மாடி தோட்டத்தில், 100 சதுர அடியில் நிழல் வலை குடில் அமைக்க, 50 சதவீத மானியத்தில், 3,500 ரூபாய் வழங்கப்படும். தவிர, 6 வகை காய்கறி விதைகள், ஒரு விதை தொகுப்பு, 45 ரூபாய், ஒரு பழச்செடி, 75 ரூபாய் என, 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்பும் இல்லத்தரசிகள், ஆதார் அட்டை நகல், புகைப்படத்துடன் அருகிலுள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம்.

Advertisement