36 சொகுசு வீடுகள் வாங்கிய ஐஏஎஸ் - ஐபிஎஸ் தம்பதி; விசாரணைக்கு ராஜஸ்தான் அரசு உத்தரவு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மூத்த ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தம்பதி, 36 சொகுசு வீடுகளை வாங்கியுள்ளது தொடர்பான புகார் குறித்து, மாநில ஊழல் தடுப்பு பிரிவு விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது.
ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 'கோயல் பேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனம், 'அனந்தா' என்ற வணிக பெயரில் நட்சத்திர சொகுசு விடுதிகளை நடத்தி வருகிறது.
சலுகை காட்டினார்
இம்மாநிலத்தில் தொழில் துறை கூடுதல் தலைமை செயலராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஷிகர் அகர்வால், முன்னதாக உதய்பூர் கலெக்டர் மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் போன்ற பதவிகளை வகித்த போது, இந்நிறுவனத்துக்கு பல சலுகைகளை வழங்கியதாக புகார் எழுந்தது.
கடந்த மார்ச் 27ல், கோயல் பேஷன்ஸ் நிறுவனத்திற்கு, ராஜஸ்தான் நிதித்துறை சிறப்பு சலுகை தொகுப்பை அனுமதித்தது. அதே நாளில், ஷிகர் அகர்வால் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில், 20 சொகுசு வீடுகள் பதிவு செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
உதய்பூர், ஆல்வார் நகரங்களில் உள்ள அனந்தா 'ரிசார்ட்'டுகளில், சந்தை மதிப்பை விட மிக மலிவான விலையில் சொகுசு வீடுகள் ஷிகர் அகர்வால் குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. உதய்பூரில் ஷிகர் அகர்வால் பெயரில் 10; அவரது மனைவியும், கூடுதல் டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரியுமான பிரஷாகா மாத்துார் பெயரில் 10 சொகுசு வீடுகள் வாங்கப்பட்டுள்ளன.
மகன்கள் பெயரில் வீடு
ஆல்வாரில், 16 சொகுசு வீடுகள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றில், ஷிகர் அகர்வால் மற்றும் பிரஷாகா மாத்துார் பெயரில் தலா நான்கு வீடுகள் வாங்கப்பட்டுள்ளன. இவர்களின் இரண்டு மகன்கள் பெயரில் மற்ற வீடுகள் வாங்கப்பட்டுள்ளன. இவ்வாறு இந்தக் குடும்பத்தினர் பெயரில் 36 சொகுசு வீடுகளும், சந்தை மதிப்பைவிட மிகவும் மலிவான விலைக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன.
வீடுகளை தங்களின் பெயரில் பதிவு செய்த கையோடு, அவற்றை கோயல் பேஷன்ஸ் நிறுவனத்திற்கே நீண்டகால குத்தகைக்கு ஷிகர் அகர்வாலின் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். இதன் மூலம், ஆண்டுக்கு, 1.8 கோடி ரூபாயை குத்தகை வருமானமாக பெற்றுள்ளனர்.
காத்திருப்பு பட்டியல்
கடந்த ஜனவரியில், ஷிகர் அகர்வால் தாக்கல் செய்த சொத்து விபர பட்டியலில், 14 சொத்துக்களை மட்டுமே குறிப்பிட்டிருந்தார். அதே சமயம், அவரது ஐ.பி.எஸ்., மனைவி பிரஷாகா மாத்துார், சொத்து எதுவும் இல்லை என குறிப்பிட்டிருந்தார். இது, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறைகேடு குறித்து ராஜஸ்தான் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரித்து வரும் நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஷிகர் அகர்வால், அவரது ஐ.பி.எஸ்., மனைவி பிரஷாகா மாத்துார் ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்
-
சித்தேரியில் கலக்கும் தொழிற்சாலை கழக/வு நீரால் ...ஆபத்து! கிராம சபையில் மக்கள் கேள்வியால் திணறிய அதிகாரிகள்
-
குலசையில் மார்ச்சில் முதல் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
-
பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அரசுக்கு ஆவின் நிர்வாகம் பரிந்துரை
-
பாரத் இன்டர்நேஷனல் சர்வதேச பள்ளி மாணவி மாநில அளவிலான போட்டியில் வென்று சாதனை
-
தொடர் மழையால் விவசாய பணி தீவிரம்
-
ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா