உள்ளாட்சி தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம்

நாமக்கல்:உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, புதுச்சத்திரம் ஒன்றியம், கலங்காணி பஞ்., சின்னகலங்காணியில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

கலெக்டர் மதுபாலன் தலைமை வகித்து பேசியதாவது: இன்றைய கிராம சபையில், 14 விவாத பொருட்கள் வாசிக்கப்பட்ட நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 2025ஐ காட்டிலும், நடப்பாண்டு மழைப்பொழிவு அதிகமாக உள்ளதால், கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

பொது இடங்களில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். இதற்கு துாய்மை காவலர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். துாய்மை காவலர்களின் பணியை எளிதாக்கும் வகையில், 1,700 வீடுகளிலும் உள்ள பொதுமக்கள், தங்கள் வீடுகளில் உருவாகும் குப்பையை மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து வழங்குவதோடு, உங்களது வீடுகளுக்கு அருகில் உள்ளவர்களுக்கும் இதுகுறித்து எடுத்துரைக்க வேண்டும்.
விரைவில் இந்த பஞ்., உள்ள தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக அரசு மூலம், டி.என்.-ரீச்., திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், பட்டா வைத்திருந்து வீடு இல்லாதவர்களுக்கு, அரசு நிதியில் இலவசமாக வீடு வழங்கவுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், விண்ணப்பித்து வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, கலங்காணி பஞ்.,ல் சிறப்பாக பணியாற்றிய, ஒன்பது துாய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், செவ்வந்தி மகளிர் குழுவினருக்கு, ஒரு லட்சம் ரூபாய், கடனுதவிக்கான காசோலை வழங்கப்பட்டது.

Advertisement